பக்கம்:மறைமலையம் 1.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
144

❖ மறைமலையம் 1 ❖

உங்கட்குத் தோன்றல் வேண்டு மன்றோ? ஏன் இஃது இவ்வாறு மாறி மாறி ஓடி வரல் வேண்டும்? ஒரே வகையாக ஓடலாகாதா? எனின்; உயிர்வாழ்க்கை யெல்லாம் ஒவ்வொரு நொடியும் மாறி மாறி நடக்கும் உயிராற்றலின் ஓட்டத்தினாலேதான் நிலைபெறு கின்றது. இந்த உயிராற்றலானது ஒரு சிறிதுநேரம் ஒய்ந்து விடுமானால் மக்கள் ஏது? மரம் ஏது? உலகம் ஏது? உயிர் ஏது? இதனை அறிவதற்கு நெடிது செல்லல் வேண்டா. பகலிற் கதிரவனும் இரவிற்றிங்களும் மாறி மாறி இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு மாறி மாறி வராமற் பகலவனே எப்போதும் விளங்கிக் கொண்டிருந்தால் எவ்வாறு இருக்கும்! அல்லது திங்களே துலங்கிக் கொண்டிருந்தால் எவ்வாறு இருக்கும்! அன்றி இவ் விரண்டுமே யில்லாமல் வெறிய இருளே பரவியிருந்தால் எங்ஙனம் இருக்கும்! இதனைச் சிறிது நினைத்துப் பாருங்கள்! அவ்வளவு நெடுகத்தான் போவானேன்? நீங்கள் எப்போதுமே தூங்காமல் வேலைசெய்து கொண்டிருந்தால் எவ்வாறு இருக்கும்! அல்லது எப்போதுமே தூங்கிக் கொண்டிருந்தால் எங்ஙனமிருக்கும்! அவை சிறிதும் விரும்பத் தக்கனவா யிருக்குமா? இராவே, சிலகாற் பகலுஞ் சிலகால் இரவுஞ், சிலகாற் கதிரவனுஞ் சிலகாற் றிங்களுஞ், சிலகால் விழிப்புஞ் சிலகால் உறக்கமும் மாறி மாறி வருமாயினன்றோ உயிர் வாழ்க்கையும் உலகமும் நிலை பெறும்? இவ்வுண்மை களால் மாறுதலே உயிர்வாழ்க்கை யாம் என்றும், அஃதின்மையே மாய்தலாம் என்றும் நீங்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம். ஆகவே, நமது மூக்குத் துளைகளிலே உயிர்க்காற்று மாறி மாறி வருவது நமது உயிர் வாழ்க்கையின் பொருட்டாகவேயா மென்று தெளிவாக உணரல் வேண்டும். நமது உடம்பின் வலது பாகமானது எவ்வகைத் தொழிலுஞ் செய்தற்கு எளியதாய் வலிவு கொண்டிருத்தலின் அது ஞாயிற்று மண்டிலம் என்றும், இடது பாகமானது எளியவான தொழில்களை மட்டுஞ் சய்தற்கு உரியதாய் வலிவு சிறிது குறைந்திருத்தலின் அது திங்கள் மட்ணடிலம் என்றுஞ் சொல்லப்படும். இதுகொண்டு வலது மூக்கில் ஓடுங் காற்றானது பகற்கலை என்றும், இடது மூக்கில் ஓடுங் காற்றானது மதிக்கலை என்றுஞ் சொல்லப்படும். வலது மூக்கிலே காற்று ஓடும்போது உடம்பில் வெப்பமும், இடது மூக்கிலே ஓடும்போது குளிரும் ஒக்கப் பரவிக் கொண்டி ருக்கும். எந்நேரமும் வெப்பமே பரவிக் கொண்டிருந்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/177&oldid=1572499" இலிருந்து மீள்விக்கப்பட்டது