பக்கம்:மறைமலையம் 1.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
146

❖ மறைமலையம் 1 ❖

மிகுதிப்படுமாயின் உள்ளமைந்த கருவிகளெல்லாம்இயக்கங் குறைந்து இறுகி நின்றுவிடும்; அதனால் உடம்பு அழிந்து போம். ஆகையால், அக் காலங்களில் உடம்பிற் குளிர்ச்சி மிகாத வண்ணம் நமது மூச்சிற் பகலவன் கலை மிகுதி யாகுமாறு செய்து கொள்வோமாயின் நுண்ணிய வெப்பம் மிகுந்து மழைகால பனிக்காலக் குளிரினால் வரும் இடரை ஒழிக்கும். இங்ஙனங் கால இயற்கை யினை அறிந்து அதற்கு ஏற்பத் தமதுடம்பில் தட்ப வெப்பங்களை மிகுதிப் படுத்திக் காள்ளவல்ல தவத்தோர்கள் எவ்விடத்தில் எக்காலத்தில் இருந்தாரானாலும் அவற்றாற் சிறிதுந் துன்புறமாட்டார்கள்.

மேலும், ஞாயிறு, திங்கண் மண்டிலங்களைத் தவிரச் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி மண்டிலங்களும் நமது மண்ணுலகத்திற்கு அருகாமையிலிருந்து கொண்டு,அவையுந் தம்மிடத்திலுள்ள தட்ப வெப்பங்களை இங்கே வருமாறு செய்வித்தலால் அவற்றாலும் நாம் தாக்குண்டு நமது உடம்பின் நலத்தையும் மனநலங் களையும் இழந்து போகின் றோம்.ஆகவே,அவற்றால் உண்டாகுங் கெடுதி களையும் விலக்குவதற்கு அவற்றின் இயல்பு அறிந்து, நமது உடம்பில் அவற்றைத் தடுத்து நிற்பதற்குப் போதுமான அளவு தட்பவெப்பங்களை மிகுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

இனி,இக்கோள்களின் ஆற்றல்கள் மிகுதிப்பட்டு நம்மை வந்து தாக்குதற்குரி யகாலம் இராக்காலத்தில் இருபது நாழிகை முதல் முப்பது நாழிகை வரையிலும் ஆகும். ஏனென்றால், இக்காலம் பகற்பொழுதிற்கும் இராப் பொழுதிற்கும் நடுநிற்பதாகும்,பகற் பொழுதிற் கதிரவனது வெப்பமும் இராப் பொழுதிற் றிங்களினது தட்பமும் உலவிக் கொண்டிருக்கின்றன. இராப் பொழுது முழுவதும் பெரும் பாலும் மதியினது தட்பம் பரவிக் கொண்டிருந்தாலும், இது வெப்பத்தைவிட வலி குறைந்ததாயிருத்தலால், இரவின் பிற்பொழுதில் தனது வலிவு பின்னுங் கறைந்து மற்றைக் கோள்களின் ஆற்றல்கள் வந்து பாய்வதற்கு இடங்கொடுத்து நிற்கின்றது. ஆகவே, வெப்பமுந் தட்பமும் உரமாக உலவுதல் இல்லாத இரவின் பிற்காலத்திலே தான் உடம்பின் நிலையை மிகவும் உன்னிப்பாய் பார்த்தல் வேண்டும்.அக்காலத்திலே தான் நோயை உண்டு பண்ணுதற்கு உரிய நச்சுப் பொருள்கள் உடலுள் வந்து நுழைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/179&oldid=1572501" இலிருந்து மீள்விக்கப்பட்டது