❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
அப்போதுதான் உடம்பில் அசதியும் உறக்கமும் மிகுதிப்படுகின்றன. இவ்வியல்பை அறிந்து யாரும் அப்போது கண் விழித்திருத்தலும், வேறு முயற்சிகள் செய்தலுஞ் சிறிதுங் கூட. இரவின் பிற்பாகத்திற் கண்விழித்தி ருப்பார்க்கும், வேறு முயற்சிகள் செய்வார்க்கும் நோய்விலை கொடுத்து வாங்கினாற் போல வந்து சேரும். அக்காலத்தில ஆணும் பெண்ணும் புணருமானால் அவ் விரண்டன் உடம்பும் நிலை குலைந்து விரைவில் அழிந்து போவது திண்ணம். ஆகையால் அக்காலத்தில் எல்லாரும் எல்லா உயிர்களும் அயர்ந்து உறங்குவதே மிகவும் நல்ல தாகும்; விடியற் காலத்திற்கு முன்னமே கண் விழிக்க வேண்டுமென்று எண்ணு பவர்கள், அவ் வண்ணத்தை விட்டு இருபத்தொன்பது நாழிகைக்குப் பின்துயில் ஒழிந்து எழுவதே சிறந்த நலத்தைத் தருவதாகுமென உணர்தல் வேண்டும்.
இனி, நல்ல உடம்போடிருப்பவனுக்கு பிற்பாகமாகிய இந்தக் காலத்திலே அவ்வக் கிழமைகளுக்கு இசைந்த வகையாக மூச்சு நடக்கும். செம்மையாயிருப்ப வனுக்குத் திங்கள், புதன், வெள்ளி என்னும் மூன்று நாட்களிலும் மூச்சானது இடது மூக்கிலே நடக்கும்; செவ்வாய், சனி, ஞாயிறு என்னும் மூன்று நாட்களிலும் மூச்சானது வலது மூக்கிலே நடக்கும்; வளர்பிறை வியாழக்கிழமையில் இடது மூக்கிலும் தேய்பிறை வியாழக் கிழமையில் வலது மூக்கிலு மாக மூச்சு நடக்கும். இவ்வாறு குறிப்பிட்ட கிழமைகளின் இரவின் பிற்பாகத்தில் மேற் சொல்லியவண்ணம் மூச்சு நடக்கின்றதா என்பதை ஒவ்வொருவரும் உன்னித்துப் பார்த்தல் வேண்டும். உடம்பு நல்ல செம்மையான நிலையிலே இருக்குமளவும் மூச்சின் ஓட்டமானது மேலே குறிப்பிட்ட வண்ணந் தவறாமல் நடக்கும். அங்ஙனம் நடவாமல் மாறுபட்டு நடக்குமாயின், ஏதோ நோய் வரப்போகிற தென்பதை முன்னதாகத் தெரிந்து கொண்டு, அவ்வாறு நோய்வராமற் றடுக்கும் பொருட்டு அந்தந்தக் கிழமை களுக்குச் சொல்லிய மூக்குத் துளைகளிலே மூச்சு நடை பெறுமாறு செய்து கொள்ளல் வேண்டும். அங்ஙனம் மூச்சு ஓட்டத்தை நாம் நினைந்தவாறு திருப்புதற்கு வழியாதெனின்; அதனைச் சைவ சித்தாந்த ஞானபோதத்திற் பிராணாயாமம் என்ற அரிய கட்டுரையின் கண் விளக்கிக் காட்டியிருக்கின்றேம்.