❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
பகுத்தறிவுது எவ்வாறு கூடுமெனில், உண்மையான மூச்சுப் பழக்கமாயின் அது பழகுதற்கு மிக்க வருத்தந் தாராதாய்ப் பழகுந் தோறும் இன்பத்தினையும் மனக்கிளர்ச்சியினையும் யாக்கை நலத்தினையுந் தரும்; அங்ஙனம் அல்லாத பொய்ப் பழக்கமாயிற் பழகுங்கால் அளவிறந்த வருத்தத்தினைத் தந்து நாளேற நாளேறத் துன்பத்தினையும் நோயினையும் வருவிக்கும். இது தெரிந்து கொண்டவுடனே இதனை அறிவுறுத்தினவன் பொய்க்குருவென்றும். இது பொய்ப் பழக்கமென்றுந் தெளிந்து அதனைப் பழகாது உடனே விட்டிடுக. இனி, நல்ல மூச்சுப் பழக்கத்தின் இயல்பை உணரவேண்டுவார் அதனை நமது சைவ சித்தாந்த ஞான போதத்திற் கண்டு தெளியக்கடவர். பொய்ப் பழக்கத்தைத் தொடர்ந்து பழகுவார்க்கு வெறி, மார்படைப்பு, என்புருக்கி, காக்கைவலி, கைகால் மரத்தல் முதலிய பல கொடிய நோய்கள் வரும்; மெய்ப் பழக்கத்தைத் தொடர்ந்து பழகுவார்க்கு மேற்குறித்த நோய்களெல்லாம் விலகிப் போவதோடு அறிவும் வலிவும் நாளுக்குநாள் மிகுந்து வரும். இன்னும் இந்த உண்மைப் பழக்கத்தால் வரும் அளப்பரிய நன்மைகளிற் சில, சிலநாட் பழக்கத்திலேயே வருவது நாளடைவிற் கண்டு கொள்ளலாம்.