பக்கம்:மறைமலையம் 1.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150


4. நெருப்பு
(சூடு -ஒளி)

மேலை இயல்களில் மூச்சுப் பழக்கத்தைப் பற்றி விரிவாகப் பேசி வந்தேம். இனி இந்த இயலிலும்இதற்கு அடுத்தஇயலிலுந் தீயைப் பற்றிப் பேசப் போகின்றேம். தீயிலிருந்து நமது பழக்கத்திற்கு வருவன சூடும் ஒளியும் ஆகும். இவற்றுட் சூட்டைப் பற்றி இந்த இயலிலும் ஒளியைப் பற்றி அடுத்த இயலிலும் பேசுவேம்.

நீரும் நெருப்பும் உலக ஒழுக்கத்திற்கு இன்றியமையாத வாயில்களாயிருக்கின்றன. இக் காலத்திற் புதுமையினும் புதுமையாய்த் தோன்றி நமக்குப் பலவைகையிற் பயன்பட்டு வரும் நீராவி வண்டிகளும் நீராவிக் கப்பல்களும் நீரும் நெருப்பும் இல்லையானால் இருந்த இடம் விட்டும் பெயர மாட்டாவே, அங்ஙனமே நீரும் நெருப்புமில்லை யானால் நமதுடம்பும் உயிரோடு இராமற் பிணமாய்க் கிடக்கும். உயிர் உடம்பில் உலவும் வரையிலும் உடம்பிற் சூடானது காணப்படும்; அஃது உடம்பை விட்டுப் போய் விடுமாயிற் சூடும் இல்லாமற் போய்விடுவது திண்ணம் ஆகவே, உயிர் உடம்பில் நிலைபெறுதற்கு முதன்மையான கருவி சூடேயாகுமென்பது சிறு மகாருக்குந் தெரிந்த தொன்றேயாகும். உயிர்க்காற்றின் ஓட்டத்தினால் உடம்பிற் சூடு உண்டாகு தலாற்றான், இரத்தமானது இறுகி உறைந்து போகாமற் பல்லாயிர இரத்தக் குழாய்களிலும் பரவி ஓடி உடம்பிற்கு வேண்டிய எல்லா முதல்களையுந் தந்து வளர்த்து வருகின்றது, நமது உடம்பிலுள்ள உறுப்புகள் எல்லாவற்றிலும் பரவி நிறைந்திருக்குஞ் சூடானது, சிற்சில நேரங்களிற் சிற்சில உறுப்புகளிற் பரவாமற் குறைந்து போகுமானால் உடனே அவ்வுறுப்புகள் நீட்டவும் முடக்கவும் ஆகாமல் திமிர் பிடித்துப் போவதை நாம் கண்கூடாய்ப் பார்க்கலாம். உடம்பிலுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/183&oldid=1573961" இலிருந்து மீள்விக்கப்பட்டது