பக்கம்:மறைமலையம் 1.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
151

உறுப்புகள் எளிதிற் சீராக அசைந்து தொழிற்படுதற்கு அவற்றிற் சூடு இருத்தல் முதன்மையாகும். எஃகு, இரும்பு முதலியவற்றிற் கத்தி முதலிய கருவிகள் செய்வோர் அவைகள் நன்றாகப் பதப்பட்டு வருதற்குப் பல முறையும் அவற்றை நெருப்பிலிட்டுக் காய்ச்சுவதைப் பார்க்கின்றோம் அல்லமோ? நெருப்பினுடன் இயைபு பட்டா லல்லாமல் அவைகள் இழைந்து பதப்பட்டு வராமைபோல, நமது டம்புஞ் சூட்டோடு யைபுபட்டா லல்லாமற் பதப்பட்டு வரமாட்டாது.

இனி, இவ்வுடம்பானது நிலைபெற்று வளருதற்குச் சூடு ஒரு பெருங்கருவியாயிருப்பது போலவே, இவ்வுடம்பு தோன்றுதற்கும் அஃது அழிதற்குஞ் சூடே கருவியாயிருக்கின்றது. கோழி தான் இட்ட முட்டைகளினின்றுங் குஞ்சு பொரிப்பதற்கு அம் முட்டைகளின்மேல் அடை கிடப்பதனைப் பார்த்திருக்கின்றீர்கள் அல்லிரோ? எதற்காக அஃது அம் முட்டைகளின்மேல் இருந்து அடை காக்கின்றது? தனது உடம்பின் சேர்க்கையால் அம் முட்டைகளிற் சூடு பிறப்பித்து, அச் சூட்டின் உதவியால் முட்டையுள் நீர் வடிவாயிருக்குங் கருவானது முற்றிக் குஞ்சின் வடிவு அடைந்து வெளிப்படுதற்காகவன்றோ? இவ்வாறே ஒரு பெண்ணின் கருப்பையுள்ளிருக்கின்ற கருவும், அப்பெண்ணின் அகட்டுத் தீயின் சேர்க்கையால் வளர்ந்து பதப்பட்டுக் கை கால் முதலிய உறுப்புகள் பொருந்தி அழகிய மகவாய் வெளிப்படுகின்றது. நிலத்தினுள் ஊன்றிய விதையும் நிலத்தின்கண் உள்ள உள்ள கதகதப்பால் உயிர்க்கிளர்ச்சிபெற்று முளை யீன்று வேரோடி, மேலே துளிரும் இலையுங் கவருங் கிளையுமாய்ச் செழிப்புற்று ஓங்கி மரமாய் வளர்கின்றது. இங்ஙனமே உலகத் துயிர் களெல்லாம் உடம்பொடு தோன்றுதற்குத் தீயினது சூடு பெரியதொரு கருவியாய் இருந்து உதவி புரிந்து வருதல் காண்மின்!

இவ்வாறு உடம்பினைத் தோற்றுவித்தும் அதனை நிலை பெறுவித்தும் வருகின்ற சூடானது, அவ்வுடம்பினுள் அழுக்குகள் நிறைந்து வெளிப்போகாமல் தங்கிவிடுமானால் அவ்வழுக்குகளை எரித்து உடம்பைத் தூயதாக்குதற்குத் துவங்குகின்றது. அவ்வாறு துவங்கி அவ்வழுக்குகளை எரித்து வரும்போது. அவ்வழுக்குகள் உடம்பினளவினும் மேற்படு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/184&oldid=1597482" இலிருந்து மீள்விக்கப்பட்டது