❖ மறைமலையம் 1 ❖ |
மானால் அவ்வுடம்பு பயன்படா தென்பதை யுணர்ந்து அவ்வுடம்பையுங் கூடவே சேர்த்து எரித்து விடுகின்றது. இங்ஙனம் உடம்பினுள்ளே தோன்றுஞ் சூட்டின் மிகுதியையே சுரம் என்றுங் காய்ச்சல் என்றும் வழங்கி வருகின்றார்கள். உடம்பில் நிறைந்த தூவா நச்சுப் பொருட்டொகுதி சிறிதாயிருந்தால் அதனை எரிக்கும் பொருட்டுத் தோன்றுஞ் சூடாகிய சுரமுஞ் சிறியதாய் அதனை எளிதிலே எரித்துத் தணிந்துபோகும்; அவ்வாறன்றி நச்சுப் பொருட்டொகுதி பெரிதாயிருந்தால் அதனை எரிக்கத் தோன்றுங் காய்ச்சலும் பெரிதாய் வளர்ந்து எரியும்; அப்போது அதன் கடுமையால் உடம்பிலுள்ள இரத்தமெல்லாஞ் சுவறி வறண்டு போக உயிர் அதனுள்ளிருக்க இடம்பெறாதாய் அதனைவிட்டு நீங்கிப் போகின்றது. ஆகையாற்றான், காய்ச்சலின் கடுமை மிகுதிப்படாமல், மிகவும் உன்னிப்பாய் அதனைத் தணிவித்தற்குரிய முறைகளை உடனே செய்தல் வேண்டும். எங்ஙனமானாலுங் காய்ச்சல் வருவது உடம்பின் நலத்திற்கேயல்லாமல் வேறில்லை. நன்றாகக் காய்ச்சல் நோய் வந்து போகுமானால் உடம்பிலுள்ள அழுக்குநீர்களெல்லாம் முற்றுமே ஒழிந்துபோய்விடும். ஆதலாற்றான் காய்ச்சல் நோய் வந்து போன பிறகு ஒருவன்றன் உடம்பானது நிறத்திலும் நலத்திலும் மேம்பட்டுச் செழிப்பாய் வளர்கின்றது. அது நிற்க.
காய்ச்சல் நோய் வருங்காலத்து அதன் கடுமை மிகுதிப்படாமல் தணியுமாறு செய்தற்கு வழியாதெனிற், கூறுவாம். உடம்பின்கண்ணே தூவா நச்சுப் பொருள்கள் சேரும் இடங்கள்; தீனிப்பை, மலக்குடல், சிறுநீர்ப்பை, மேற்றோலின் வியர்வைப் புழைகள், மூச்சு இயங்கும் நுரையீரல் என்பனவைகளேயாகும். காய்ச்சல் நோய் காணுமென்று தெரிந்தவுடனே இவற்றைத் தூய்மைப்படுத்தி, இரண்டு கிழமை வரையில் அவற்றைத் தூயவாக வைத்துக் கொண்டு வருவமாயிற், காய்ச்சலும் மற்றைப் பிணிகளும் நீங்கி நலமாயிருக்கலாம். அவ்விடங்களைத் தூய்மைப் படுத்தும் வழிகள் யாவை யென்றாற் சொல்லுவாம். காய்ச்சல் வருமென்று கண்டவுடனே உணவு உட்கொள்ளுதலை நிறுத்தி விடல் வேண்டும்; ஒருகால் மிகுந்த பசியெடுத்தாற் கஞ்சி வகைகளில் ஏதாவது சிறிது சிறிது உட்கொள்ளலாம். பசியெடாத வரையில் உணவு சிறிதும் உட்கொள்ளலாகாது.