❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
இங்ஙனம் உணவு உட் கொள்ளாதிருக்கவே. வயிற்றிலுள்ள பசித் தீயானது தீனிப்பையிலுள்ள தூவா நச்சுப் பொருள்களெல்லாவற்றையும் எரித்து அகற்றிவிடும். அதனொடு நீர் ஏற்றுங் குழாய் வழியாக மலக்குடலுக்கு நிரேற்றினால், அக்குடலில் உள்ள மலக்குவியல் அவ்வளவும் வெளிப்பட்டு மலக்குடல் சிறு நீர்ப்பைகள் தூயவாகும். அதனொடு வெது வெதுப்பான நீரை ஒரு துணியிற்றோய்த்துச் சிறிது பிழிந்து விட்டு உடம்பின்மேற் றேய்த்துக் கழுவிக் கழுவினவுடனே ஈரத்தை வேறொரு தூய்தான துணியினாற் புலர்த்திக், கம்பளியினாற் போர்த்துக் கொண்டு இருந்தால் இரத்தத்திற் கலந்த அழுக்குகள் எல்லாம் மயிர் துளைகளின் வழியே வியர்வைத் துளிகளாக வெளிவந்துவிடும்; அவ்வாறு வரும் வியர்வை திரும்பவும் உள்ளே சுவறாமல் உடனுக்குடன் அதனைத் துணியினால் துடைத்துவிடல் வேண்டும். இங்ஙனம் முறையாகச் செய்துகொண்டு வந்தாற் சில நாளிற் காய்ச்சல் நோய் தணிந்து உடம்பு நலப்படும். அதனோடு ஒடுக்கிடங்களில் இராமல் நன்றாகப் போர்த்துக் கொண்டே தூய காற்று வீசும் இடத்தில் இருத்தல் வேண்டும். இந்த வகையாகத் தீனிப்பை, மலக்குடல், சிறுநீர்ப்பை, மேற்றோலின் வியர்வைத் துளைகள், நுரையீரல் முதலியவற்றை துப்புரவு செய்தல் வேண்டும். இன்னும் இம்முறைகளைப் பின்னே வரும் நோய் நீக்கும் யல்களில் விரித்துக் கூறுவாம். மேற் சொல்லியவாற்றால் உடம்பினுள்ளே தோன்றுங் காய்ச்சல் நோய் என்னுஞ் சூட்டைப் பதம் அறிந்து தணியச் செய்யாவிட்டால், அதுவே உடம்பை அழித்துவிடும் என்னும் உண்மை செவ்வனே விளங்கா நிற்கும்.
இனி, மழைகால பனிக்காலங்களிற் குளிரும் ஊதற் காற்றும் மிகுதியாயிருக்கும்போது உடம்பிற் சூடு செவ்வையாக இருக்கும் வண்ணஞ் செய்துகொள்ளல் வேண்டும். உலக இயற்கையை உன்னித்துப் பார்மின்கள்! வெளியே குளிர் மிகுதிப்பட்டால் அதனைத் தடுத்து எதிர் நிற்பதற்குப் போதுமான அளவு சூடு உடம்பிற் றோன்றுகின்றது. இங்ஙனம் இயற்கையாக உடம்பிற் றோன்றுகின்ற சூட்டைக் குறையாமற் பாதுகாக்க வேண்டுவது ஒவ்வொரு வர்க்கும் முதன்மையான கடமையா யிருக்கின்றது. இங்ஙனம் இயற்கையாக உடம்பிற் சூடு
.