❖ மறைமலையம் 1 ❖ |
உண்டாகியும், அதனைப் பாதுகாவாமல் உடம்பின்மேற் குளிர் காற்றுப்படுமாறு அதனை ஆடையின்றித் திறப்பாக விட்டு விட்டால், மேலே குளிர்காற்றுப் படப்படத் தோலின் அடியே ஓடிக் கொண்டிருக்கும் இரத்தமானது அங்கங்கே உறைந்து கட்டிப்பட்டு நின்றுபோகும். இரத்த ஓட்டங் குறைந்து இரத்தம் இறுகியவுடனே விழித்திருக்கக் கூடாத தூக்கம் வந்து சேரும். அவ்வாறு தூக்கம் வருவதை முன்னுணர்ந்து அதனை நீக்கத் தக்கது செய்யாமல் ஒருவன் படுத்து உறங்கி விடுவானானால், அங்ஙனம் உறங்கினவன் மறுபடியும் உயிரோடு எழுந்திருக்க மாட்டான். முற்றும் மடத்தனமாய்க் குளிர்காற்றில் தன் உடம்பைக் காட்டி உடம்பின் நலம் இழந்தவன் உயிர தப்பிப் பிழைக்க வேண்டுமானால், உடனே சாம்பலைச் சூடு பிறக்க வறுத்து ஒரு துணியிற் கட்டி உடம்பு முழுதும் பலமுறை ஒற்றடங் கொடுப்பதுடன், கருப்புர நெய்யையும் உடம்பெங்குந் தடவிச் சூடு பிறக்கத் தேய்த்துக் கம்பளிப் போர்வையாற் போர்த்துக் கொண்டிருந்து உடம்பெங்கும் வியர்வை உண்டாகச் செய்தல் வேண்டும். அது வல்லாமலுங், கடுகை இட்டுக் காய்ச்சின வெந்நீரைப் பொறுக்குமளவு சூடாக்கி அதில் இரண்டு கால்களையுஞ் சிறிது நேரந் தோய்த்து வைத்திருந்து, பிறகு எடுத்து ஈரத்தைத் துவர்த்திவிட்டுக் கம்பளியால் மூடி வைக்க வேண்டும்.
மேலும் ஊதற்காற்றில் தன்னுடம்பை நெடுநேரந் திறந்து வைத்திருந்தவனுக்கு மேற் சொல்லியவாறே தோலிலுள்ள இரத்தம் உறைந்து போகா விட்டால், வேறொரு கடுமையான நோய் உண்டாகும். தோலின்மேற் குளிர்காற்று நெடுநேரம் வீசுவதால் தோலின் அடியில் ஓடும் இரத்த மெல்லாம் அங்கே உலவுவதற்கு இடம்பெறாமல் உடம்பினுள்ளே இருக்கும் இரத்தப் பைகள் குழாய்களிற் றிரும்பிப்போய் அவ்விடங்களில் அளவுக்கு மேல் நிரம்பித் திரளையாய்போகும். ஒவ்வொருவர் உடம்பிலும் வலிவற்ற இடங்கள் பல இருத்தலால், அவ் வலிவற்ற இடங்களுக்கு அவ்விரத்தம் நேரே சென்று திரளையாய்ப் போவது பழக்கத்தில் அறியப்பட்டதோருண்மையாகும். ஒருவருக்கு நுரையீரல் வலுவில்லாத இடமாயிருக்குமாயின் அவ்விடத்திற்குக் குளிரால் துரத்தப்பட்ட இரத்தமானது அங்கே அளவுக்கு மேற்பட்டு நிரம்பிக் கட்டிப்பட்டுப்போகும்.