பக்கம்:மறைமலையம் 1.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
155

மேலே குறிக்கப்பட்ட வண்ணம் உடம்பினுள் எங்கே அழுக்குச் சேருகின்றதோ அங்கேஅதனைப் போக்குதற்கென்று உடனே காய்ச்சல் என்னும் உயிர்த் தீயானது மிகுந்து தோன்றா நிற்கும். நுரையீரலில் இரத்தமானது தங்கிக் கட்டியாகி அழுக்குப் பட்டுப்போனவுடனே, அவ் வழுக்கை நீக்க உடனே காய்ச்சல் எழாநிற்கும். இக் காய்ச்சலுக்கு நுரையீரற் காய்ச்சல் என்பது பெயர். இக் காய்ச்சல் மிகக் கொடுமையானது. பெரும்பாலும் மருந்துகளினாற் றீர்க்கப்படுதற்கு இஃது இடந்தருவதில்லை. நுரையீரலில் அழுக்குச் சிறிதாகஇருந்தால் இக் காய்ச்சல் மிக மும்முரமாக நிகழாமல் தானே சில நாளிற் படிந்துவிடும்; அழுக்கு அங்கே மிகுதியாய்ச் சேர்ந்திருந்தாலோ காய்ச்சல் மிக மும்முரமாய்த் தோன்றி அவ்வழுக்கை எரிப்பதொடு கூடச் சேர்த்து மூச்சோட்டத்திற்கு இடமான நுரையீரலையும் எரித்து உடம்பையும் அழித்துவிடும். ஆகையால், இத்தகைய கொடியநோய்கள் வருதற்கு இடஞ் செய்யாமல் ஒவ்வொருவரும் மிகவுங் கருத்தாக இருத்தல் இன்றியமையாத தென்பதனை யாம் சொல்லுதலும் வேண்டுமோ? மேற்சொல்லியவாறு மழைகால பனிக் காலங்களில் வெப்பக் குறைச்சலால் உடம்புக்கு இடர் வருவது போல, வேனிற் காலத்தில் வெப்ப மிகுதியினாலும் உடம்புக்கு இடர் வருகின்றது. வெயிற் காலத்தில் வெப்பம் மிகுதியாயிருக்கும் போது உடம்பைத் தொட்டுப் பார்த்தல் அது சில்லென்று குளிர்ச்சியாயிருக்கும். இதனால் அறியற்பாலது யாது? வெளியே வெப்பம் மிகுதிப் படுங்கால், உடம்பிற் குளிர்ச்சியும் மிகுந்திருக்க வேண்டு மென்பது அன்றோ? அங்ஙனமல்லாமல் உடம்பிலும் வெப்பம் உண்டாகுமானால், உள்ளமைந்த கருவிகள் சீர்குலைந்து உடம்பைச் சிதைத்துவிடும். இவ்வாறு உலக இயற்கையில் அமைந்த மாறுதல்களைக் கருதிப் பாராத மடமையினாலேயே பெரும்பாலார் சிறுபோதிலேயே உயிர் துறக்கின்றனர் வெயில் மிகுதியாயிருக்கும்போது வெளியே நடத்தலாவது திரிதலாவது கூடாது; அன்றித் திரிந்தால் மூளையில் மயக்கம் ஏறிக் களைத்து வீழ்ந்து உயிரை யிழப்பர். மற்றுக், கட்டாயமாக வெயிலிற் போக நேர்ந்தால், தண்ணிரில் தோய்த்த துணியைப் பிழிந்து ஈரமாகவே அதனைத் தலையுடம்புகளி மேற் போர்த்துக் கொண்டு செல்லல் நன்று. கறுப்புநிறமுள்ள துணிகளை மேலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/188&oldid=1597496" இலிருந்து மீள்விக்கப்பட்டது