பக்கம்:மறைமலையம் 1.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
157

கூடாத நிலைமையிலுள்ள பறவைகளுக்கும் விலங்குகளுக்கும், அவற்றின் நிலைமையை நன்குணர்ந்த அருட்பெருங் கடலாகிய கடவுள், அடர்ந்த மயிரைப் போர்வை போல் உடம்பெங்கும் வளரச் செய்திருக்கின்றார். குளிர்ந்த நாடுகளிலுள்ள உயிர்களுக்கு உடம்பிலுள்ள மயிரானது வெவ்விய நாடுகளில் உள்ள உயிர்களின மயிரினும் மிகுதியாயிருத்தலை நீங்கள் உற்றுப் பார்த்ததில்லையா? இதனால், இறைவன்றன் அருட் குறிப்பானது உயிர்களை மழைக்கும் வெயிலுக்குந் தப்புவித்துப் பிழைப்பிக்க வேண்டுமென்பதேயாதல் தெளிவாய் அறிகின்றோமல்லமோ? அங்ஙனமிருக்க ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்றவாறாய், இவ்வுண்மைகளை ஆய்ந்து ஓய்ந்து பாராமல் ‘இவை யாராற் செய்யமுடியும்?’ என்று மிக எளிதாய்ப் பேசிப் போஞ் சோம்பேறிகள், பிறருரித்து வாயில் வைத்த வாழைப்பழத்தையும் உள்ளே விழுங்கச் சோம்பலுற்று, இதனை உள்ளே துறுத்திப் போகச் செய்வார் இல்லையா?’ என்று எதிர்பார்ப்பவரையே ஒப்பராகலின், அவரை நோக்கி இவ்வரும் பொருள்கள் சொல்லப்படவில்லை யென்பதை உணர்ந்து கொள்க. ஆகவே, பனிக் காலத்திற் குளிரினால் வருந் துன்பத்தை ஒழித்தற்குத் தகுந்த உடைகளை உடுத்துக் கொள்ளுதல் போலவே, வெயிற் காலத்திற்கு இசைந்தவற்றை அணிவதும் மக்களின் பகுத்தறி வுணர்ச்சிக்குப் பயனாம் என்க. அறியாமையால் வெயிலிற்றிரிந்து இரத்தக் கொதிப்பு உண்டாகி மயக்கம் அடைந்து இடர்பாடான நிலைக்கு வந்தவர்களைக் காலந்தாழ்த்தலின்றிக் குளிர்ந்த நீரிலே சிறிது நேரந் தலை முழுகுவித்து ஈரம்புலர்த்தி நிழல் மிகுந்த விடத்திற் கிடத்தி வைத்தல் வேண்டும்.இவ்வாறு செய்யா விட்டால் வெயிலாற் றாக்கப்பட்டவர்கள் தமது உயிரை இழத்தல் திண்ணம். வெயிலிற் றிரிந்தமையால் ஒரு நொடிப் பொழுதில் இறந்துபோன எத்தனையோ பெயரைப் பற்றி யாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். வெப்பம் மிகுந்த வேனிற் காலத்திற் பகலிற் பதின்மூன்று நாழிகைமுதல் இருபத்திரண்டரை நாழிகை வரையில் எங்குந்திரியலாகாது; அப்போது குளிர்ந்த நிழலுள்ள இடங்களிலேயே இருத்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/190&oldid=1597504" இலிருந்து மீள்விக்கப்பட்டது