158
5. ஒளி
ஒளியானது எல்லா உயிர்களின் உயிர் வாழ்க்கைக்கும் இன்றியமையாததாகும். வெளிச்சம் இல்லையானால் உலகத்தில் எவ்வகையான தொழிலும் நடைபெறாது. ஓர் ஆடவன் உலகத்திலுள்ள பலவேறு வகையான அழகிய தோற்றங்களையுங் கண்டு களிப்பது ஒளியின் உதவியினா லன்றோ? அவன் பலவழியிற் றன்னை வந்து சூழ்கின்ற இடர்களுக் கெல்லாந் தப்பிப் பிழைப்பது பகலவ னொளியின் உதவியினாலன்றோ? பகலவனொளி மட்டும் இல்லையானால் மக்களெல்லாருங் குருடரினுங் கீழ்ப்பட்டவராவர். குருடராவது பிறருதவியினால் இங்குமங்கும் இயங்க இடம்பெறுவர். கதிரவனது ஒளியை இழந்தவரோ தமக்கு வேறு துணை கிடைப்பது கூடாமையால் இருந்தவிடம் விட்டுப் பெயர்தற்கும் ஏலாதவராயிருப்பர். பாம்பு, தேள், நண்டுத் தெறுக்கால் முதலான கொடிய நச்சுஉயிர்கள் இருக்குமிடங்களைத் தெரிந்து அவற்றை விலகி ஒழுகல் ஞாயிற்றின் ஒளியினாலேயாம். உழுது பயிர் செய்யும் நிலன் இதுவென்றும், இதனை நீர் நிரப்பிப் பண்படுத்தும் வகையிதுவென்றும், பகுத்தறிந்து பயிர் செய்து உணவு பெற்று வாழ்தலும் ஞாயிற்றின் ஒளியினாலேயாம். ஆண் இதுவென்றும் பெண் இதுவென்றும் ஒருவரையொருவர் உணர்ந்து மருவிக் கால்வழி பெருக்குதலும் ஞாயிற்றினொளி ஒன்றினாலேயாம். எங்கும் இருளே சூழ்ந்திருந்தால் உயிர்கள் தோன்றுதலும் உயிர் வாழ்தலும் எவ்வாற்றானும் கை கூடாதனவாகும். இதுமட்டுமா! உயிர்வாழ் உடம்புகள் சழிப்புற்று வளர்ந்து வருவதற்கும் அவைகள் வெயில் வெளிச்சத்தில் இருத்தல் இன்றியமையாததாகும். பின் வருமாறு செய்து ஆராய்ந்து பார்த்தால் ஒளியின் பயன் நன்றாகப் புலப்படும். இரண்டு மண் தொட்டிகளில் வைத்து வளர்க்கப்பட்ட செடிகளில் ஒன்றை வெயில் வெளிச்சம்படும்