பக்கம்:மறைமலையம் 1.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
160

❖ மறைமலையம் 1 ❖

காற்றுத் தோன்றி உலவுதற்குங் கதிரவன் வெளிச்சம் எவ்வளவு இன்றியமையாத தாயிருக்கின்றது என்னும் உண்மை உள்ளங்கை நெல்லிக்கனிபோற் றெள்ளிதிற் புலப்படுகின்றதன்றோ?

அங்ஙனமாயினும், பகலவனில்லாத இராக் காலத்தில் நிலவினொளி உண்டாகையால், ஞாயிற்றினொளியே உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்று சொல்வது எவ்வாறு பொருந்துமென்றால்; திங்களுக்குள்ள ஒளியும் பகலவனொளியினின்றும் வந்ததேயாகும் கண்ணாடியிற் றோன்றும் முகமானது அதற்கு உரியதாகாமல், வெளியே மெய்யாக உள்ள ஒருவன் முகத்தினது எதிர்த் தோற்றமாயிருத்தல் போலத் திங்களினிடத்துள்ள ஒளியும் ஞாயிற்றினொளியின் எதிர் விளக்கமேயாகும். நிலவினிடத்திருந்து வரும் இவ்வொளி நேரே திங்களுக்கு உரியதாகாமல், ஞாயிற்றினுக்கே உரியதாகும் என்பதனை வானநூல் உணர்ந்தார் இனிது விளக்கிக் காட்டுகின்றார்கள். ஞாயிற்றிலிருந்து இவ்வொளி நேரே வரும்போது இது மிகுந்த வலியுடையதாய், விந்து எனப்படும் மின்னை எங்கும் பரவச் செய்து துலங்குகின்றது; அதுவே எதிர்த் தோற்றமாய்த் திங்களின் வழியே வரும்போது தன் ஆற்றல் குறைந்து நாதம் எனப்படுங் குளிர்ந்த அமிழ்தத்தை எங்கும் பரப்பி ஒளிர்கின்றது. கதிரவனிடத்திருந்து வருங்கால் ஆற்றல் மிகுந்திருத்தல் பற்றியே அதனிடத்துச்சூடு காணப்படுகின்றது; திங்களினிடத்து எதிர்த்தோற்றமாக வரும்போதோ அதன்கட் சூடு காணப்படாமற் குளிர்ச்சியே காணப்படுகின்றது. ஆகவே, இராக்காலத்திற் றுலங்குகின்ற நிலவொளியும் பகலொளியின் எதிர்விளக்கமே யன்றி வேறு அல்லாமையால் உயிர் வாழ்க்கைக்கு ஞாயிற்றினொளியே எவ்விடத்தும் எக்காலத்தும் உதவியாய் இருப்பதென்பது கடைப்பிடிக்க.

இத்தனை உதவியாயுள்ள வெயில் வெளிச்சம் நாம் இருக்கும் வீடுகளில் தாராளமாக வந்து படும்படி கூரைகள் மேலுஞ் சுவர்களிலும் சாளரங்கள் பற்பல அமைத்து வைத்தல் வேண்டும். கதிரவனொளியே படாமல் இருள் அடைந்து கிடக்கும் வீடுகளின் உள்ளே எந்நேரமும் இருப்பவர்கள், இருளில் வளர்ந்த செடிபோல் வெளுப் படந்து இரத்தங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/193&oldid=1573972" இலிருந்து மீள்விக்கப்பட்டது