❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
கெட்டுப் பல்வகை நோய்களுக்கு ஆளாகி இறப்பார்கள். இன்னும், பகலவன் ஒளி உடம்பின்மேற் படும்படியாக, மேல் அணிந்த உடைகளைக் களைந்துவிட்டு வெயிலில் உலாவுதல் இரத்தந் தூயதாவதற்குச் சிறந்த வழியாகும். ஏனென்றாற், பகலவன் ஒளியிற் கட்புலனக்குத் தெரியாதபடி எங்கும் பரவிக் கொண்டிருக்கும் விந்து என்னும் மிக நுண்ணிய பொருளானது மயிர்க் கால்களின் வழியே உடம்பினுட் புகுந்து இரத்தத்தைத் துப்புரவு செய்து உள்ளமைந்த கருவிகளை வலிவேறச் செய்கின்றது. நோயை உண்டு பண்ணும் நுண்ணிய புழுக்கள் மக்கள் உடம்பினுள்ளே பலமுகமாய் வந்து சேர்கின்றன. அப் புழுக்கள் இரத்ததிற் கலந்தவுடனே அதனால் உடம்பினுட் பல விடங்களுக்கும் அவை கொண்டுபோக்கப்பட்டு அவ்வவ்விடங்களில் வலிவு குறைந்த கருவிகளைக் கௌவித்தின்று விடுகின்றன. இத் தன்மையவான தீய புழுக்கள் நுரையீரலைத் தின்றுவிடுதலி னாலேயே எலும்புருக்கி என்னும் நோய் உண்டாகி எத்தனையோ பெயர்களின் உயிரைக் கொள்ளை கொண்டு போகின்றது. கோமாரிக் காய்ச்சல், தொழுநோய் முதலான நினைத்தற்குங் கொடுமையான நோய்களுங்கூட இப்பொல்லாத புழுக்களின் சேர்க்கையினாலேதான் தோன்றிப் பல்கோடி யுயிர்களை அரித்தெடுத்துக் கொண்டு போய் விடுகின்றன! ஆண் பெண் மருவுதலிற் றோன்றுங் கொறுக்கு முதலான கொடிய நோய்களும் இத் தீய புழுக்களின் நுழைவினாலே தான் கிளைக்கின்றன! வெயிலினொளி உடம்பு முழுதும் படுமேயானால், அதனால் உள்ளே செல்லும் விந்துவானது அந்நச்சுப் புழுக்கள் எல்லாவற்றையும் ஒருங்கே கொன்று உடம்பை நோய் அணுகாமற் காக்கும். இக்காலத்துப் புது நாகரிகத்தினால் விழுங்கப்பட்ட நம்மனோர் தமதுடம்பை உச்சந்தலையிலிருந்து உள்ளந்தாள் வரையிற் பலவகை உடைகளால் நன்றாக மூடிக்கொள்கின்றார்களாதலால், வெயிலினொளியே அவர்கள்மேற் சிறிதாயினும் படுதற்கு இடம் இல்லாமற் போகின்றது. போகவே உடம்பின் வளர்ச்சிக்கு இன்றியமையாத் துணையான விந்துவானது போதுமான அளவுக்கு உட்செல்லக் கூடாமையால், ஏற்கெனவே உடம்பிற் புகுந்த நச்சுப்புழுக்கள் இறவாமல் ஒன்று பல்லாயிரமாய்க் கிளைத்து உடம்பை நோய்க்கு இரையாக்குகின்றன. நமதுடம்-