பக்கம்:மறைமலையம் 1.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
162

❖ மறைமலையம் 1 ❖

பில் மற்றை இடங்களைக் காட்டினும் மறைவான இடங்கள் எந்நேரமும் இடைவிடாமல் துணிகளினால் மறைக்கப்பட்டிருத்தலினாலேயே அவ்விடங்கள் நல்ல இரத்த ஓட்டத்திற்கு இடம்பெறாவாய் வலிவுகுன்றிப் போகின்றன, நல்ல இரத்தம் குறைந்து வலிவின்றி இருக்கும் அவ்வுறுப்புக்களில் நச்சுப் புழுக்கள் நுழைந்தால் கொறுக்குப்புண் முதலான நோய்கள் உண்டாகி மருந்துகளினுந் தீராவாய் ஆண்பெண் குறிகளைத் தின்று விடுகின்றன. அங்ஙனம் ஆகாவிட்டால் உயிர்க்கிருப்பிடமான அவ்வுறுப்புக்களின் வலிவைக் குறைத்து அவற்றிற்கு உரியாரை அலிகளாகவும் பேடிகளாகவுஞ் செய்துவிடுகின்றன. நாகரிகம் மிகுந்த நாடுகளில் இருக்கும் மக்களுக்கு வரும் இத்தன்மையவான கொடிய நோய்கள் ஆப்பிரிக்கா அமெரிக்கா முதலான நாடுகளிற் காடுகளிலே காலங்கழித்து வரும் நாகரிகமில்லா மாந்தர்க்குச் சிறிதும் வருவதில்லையென்று இந்நுணுக்கங்களை முற்றும் ஆராய்ந்து அறிந்த பாபிட்[1] என்னும் அமெரிக்க அறிஞர் இனிது விளக்கிக் காட்டியிருக்கின்றார். அஃது எதனால் என்றால், அந்நாட்டின் காடுகளிலே வாழும் அம் மக்கள் மேலே ஆடை அணிவதின்றி முண்டமாக உலவுதலினால், வெயில் வெளிச்சம் அவர்கள் உடம்பு முழுவதும் படுகின்றது. அங்ஙனம் படும் வெளிச்சத்தினின்று பரவும் விந்துவானது அவர்கள் உடம்பினுள் நுழைந்து இரத்தத்திற் கலந்து நச்சுப் பொருள்களை முற்றுந் தொலைத்து, அவ்வுடம்பைப் பொன் வடிவாகச் செய்கின்றது. ஓர் ஐரோப்பிய அறிஞர் ஞாயிற்றினொளியின் இவ்வியத்தகும் ஆற்றலை இன்னும் உறுதியாகத் தெரிந்து கொள்ளல் வேண்டி, நாகரிகமற்ற அம் மாந்தர்களிற் சிலரை அழைத்து அவர்கள் உடம்பைச் சிலநாள் ஆடைகளினால் மூடச் செய்து, அதன் பிறகு கொறுக்குப்புண் புழுக்களை அவர்கள் உடம்பினுள்ளே நுழையவிட்டார். சில நாட்கள் வரையிற் பகலொளி படாமல் மறைத்து வைக்கப்பட்ட அவர்களுடம்பிலே அந் நச்சுப் புழுக்கள் நுழைந்து உடம்பெங்குங் கொறுக்குப் புண்ணை உண்டாக்கிப் பெருகின. இதனைக் கண்டதும் அவ்வறிஞர் அவர்கள் மேலே அணிந்திருந்த ஆடைகளை யெல்லாங் களைந்து வாங்கிக் கொண்டு மறுபடியும் அவர்களைக் காட்டிலே முண்டமாகவே உலவும்படி விட்டு விட்டார்.

  1. 1
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/195&oldid=1573974" இலிருந்து மீள்விக்கப்பட்டது