பக்கம்:மறைமலையம் 1.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
163

அப்பாற் சில நாட்கள் சென்ற பிறகு திரும்பவும் அவர்களை வரவழைத்துப் பார்க்கையில், அவர்களுடம்பில் முன்னே உண்டுபண்ணப்பட்ட கொறுக்குப் புண்கள் எல்லாம் முற்றும் ஒழிந்து போக அவர்கள் உடம்பு தூய இரத்தம் மிகுந்து நலமுடைய தாயிருக்கக் கண்டார். அதுமுதற், பகலவன் ஒளியே தூய இரத்தத்திற்கும் உடம்பின் நலத்திற்கும் முதன்மையான ஏதுவாகும் என்று முடிவு கட்டினார். ஆகவே, பகலவன் வெளிச்சம் நம்மேற்படும்படி செய்து கொள்வது நமதுடம்பினைப் பொன்னுரு வாக்குதற்கு இன்றியமையாத தொன்றாமென்பது உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெற்றென விளங்கற்பாலதேயாம்.

அவ்வாறாயின், நாகரிக வாழ்க்கையிலுள்ள நம்மனோர் மேலாடையின்றி முண்டமாக உலவுவராயின், அவர் வெறி பிடித்தவரென்று இகழப்பட்டுச் சிறைக் களத்தே இடப்படுபவரே யெனின்; அறியாது கூறினாய், கதிரவ னொளி உடம்பெங்கும்படும்படி செய்து கொள்ளல் வேண்டும் என்று யாம் சொல்லியது கொண்டே யாம் முண்டமாக உலவும்படி கூறினேம் என்று கருதுதல் பெரியதோர் அறியாமையாம். பின்னை என்னையோ வெனின், நாம் இருக்கும் இல்லங்களிலே வெயிற் காய்வதற்கென்று மேலே திறப்பாகவிடப்பட்ட தனி அறை ஒன்று இருத்தல் வேண்டும். அவ்வறையினுள்ளே சென்று கதவைத் தாழ் இட்ட பிறகு ஆடையை முழுதுங் களைந்து விட்டுக் குறைந்தது ஒன்றரை நாழிகை[1] யளவு வெயில் மேலே படும்படி காய வேண்டும், இங்ஙனம் நாடோறுமாயினும் ஒரு கிழமைக்கு மூன்றுமுறை யாயினும் வெயிற் காய்ந்து வந்தால் உடம்பிலுள்ள நச்சுப் பொருள்களெல்லாந் தொலைந்து போகும்; இரத்தந் தூயதாகி உடம்பை உரம்பெறச் செய்யும்; தலைமேல் நரைத்திருந்த மயிர்கள் எல்லாம் நரை மாறிக் கன்னங்கறேல் என்று ஆகும். காலை வெயில் பித்தத்தையும் உச்சிவெயில் களைப்பையும் உண்டுபண்ணி உடம்பிற்குத் தீமையை விளைக்குமாதலால், இருபத்து நான்கு நாழிகைக்கு மேற் பகலவன் மேல்பாற் சாயும்போது உண்டாகுஞ் சாய்வெயிலே காய்வதற்கு மிகவும் ஏற்றதாகும் என்பதனை நுண் உணர்வாற் கண்டு கொள்க. நன்று சொன்னீர், அமிழ்தவுருவான விந்து நுண்பொருளைப் பரப்புங் கதிரவனொளியில்

  1. 2
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/196&oldid=1597526" இலிருந்து மீள்விக்கப்பட்டது