பக்கம்:மறைமலையம் 1.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
164

❖ மறைமலையம் 1 ❖

எந்தப் பொழுதில் இருந்தாலும் அது நன்மையையே செய்ய வேண்டும் அல்லாமற் காலையிற் பித்தத்தையும் நடுப்பகலிற் களைப்பையும் உண்டுபண்ணு மென்பது யாங்ஙனம் எனின்; “அமிழ்தமே யானாலும் அளவு அறிந்து உண்” என்றபடி நல்ல பொருளாயிருந்தாலும் அதனைப் பயன்படுத்தும் முறையும் பொழுதும் இடமும் நுட்பமாக உணர்ந்து கொள்ளாமல் உட்கொண்டால், அதுவே தீது செய்யும். நறுமணங் கமழும் பருப்புணவாயிருந்தாலும் நிறைய உண்ட வயிற்றிலே அதனைச் சேர்த்தால் அது தீமை செய்யுமென நாம் பழக்கத்தில் அறிந்ததில்லையா? மடவாரொடு கூடி நுகருங் காமவின்பத்தினுஞ் சிறந்தது இவ்வுலகில் வேறு இல்லையாயினும், அதனையும் பொழுதறிந்து உணர்வு உருகி முறைப்பட நுகராவிட்டால் அதுவுந் தீமையே பயத்தல் கண்டாமன்றோ? நமது உடம்பு மென்மையான பொருள்களால் அமைக்கப்பட்ட தொன்றாகையால், அஃது எப்பொருளை எக்காலத்தில் ஏற்றுக் கொள்ளுதற்கு இசைவு உண்டோ அதனை அறிந்து அதற்கு ஏற்ப ஒழுகுதலே நீண்ட காலம் உயிர்வாழ்வதற்குச் சிறந்த வழியாகும். வெயில் வெப்பமில்லாமையினாலே இராக்காலத்தில் நிலமுங் காற்றுங் குளிர்ந்து காணப்படும் அப்போது உடம்பினுள் நின்ற வெப்பமுங் குறைந்திருக்கும். திரும்பவும் ஞாயிறு தோன்றும் விடியற் காலத்திலே உடம்பினுள் அடங்கியிருந்த அவ் வெப்பமானது முன்னிலுஞ் சிறிது பெருகித் தோன்றும். வெப்பத்தால் மிகுவது பித்தமே ஆகையால், காலை வேளையில் ஞாயிற்றினெதிரிலே உடம்பிற் பித்தம் மிகும். இயற்கையிலேயே ஞாயிறு தோன்றும்போது உடம்பிற் பித்தம் மிகுதிப்படுதலால், பின்னும் வெயில் வெப்பம் உடம்பின் மேற் படும்படியிருந்தால் அது பின்னும் மிகுதி யாகும் என்பதனை யாம் சொல்லவும் வேண்டுமோ? ஆதலினாற்றான், காலை வெயில் மேற்படும்படி உலாவுதல் நன்றாகாது என்று உலகத்தாருங் கூறுகின்றார்கள். அப்படி யானால் வெளியே குளிர் மிகுந்தால் அதனை எதிர்த்து நிற்பதற்குப் போதுமான சூடும், வெளியே சூடு மிகுந்தால் அதனை எதிர்த்தற்குப் போதுமான குளிர்ச்சியும் உடம்பிற் காணப்படும் என்று முன் இயல்களிற் சொல்லியதற்கு மாறாக, இவ்விடத்தே இரவில் நிலங் குளிர்ந்தமையால் உடம்பிலுஞ் சூடு குறையும் என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/197&oldid=1573976" இலிருந்து மீள்விக்கப்பட்டது