❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
விடியலிலே கதிரவன் தோன்றுதலால் உடம்பிற் சூடு மிகும் என்றுங் கூறியது என்னையெனின்; நன்று வினாயினாய், வெளியே குளிர்மிகும் போது உடம்பிற் சூடு காணப்படும் என்று மேல் இயல்களிற் கூறியது, உடம்பின் மேற்பாகத்திற் றோலின்மேற் சூடு மிகும் என்றும், பகலில் வெம்மை மிகும் போது உடம்பிற் குளிர்ச்சி காணப்படும் என்றது உடம்பின் மேற்றோலிற் குளிர்ச்சி மிகும் என்றும் அறிவித்தற்கேயாம். குளிர் காற்று மேலே வீசும்போது மேற்றோலில் ஓடும் இரத்தம் இறுகி உறைந்து போகா வண்ணம் அகட்டின் அடியில் உள்ள உயிர்த் தீயானது உடம்பின் மேற் பாகத்திற் பரவும்; தீக்காற்று மேலே வீசும்போது மேற்றோலில் ஓடும் இரத்தம் சுவறிப் போகாதபடி மேற்றோற் சூட்டிற் பெரும்பாகம் அகட்டின் அடியிற் போய்விடும். இராக்காலத்தில் அவ்வடியிலுள்ள அனலிற் பெரும்பாகம் உடம்பின் மேற் பரவியிருத்தலால், அகட்டினடியில் அது குறைந்தேயிருக்கும் பகற்காலத்தில் உடம்பின் மேலுள்ள சூட்டின் பெரும் பாகம் அகட்டினடிக்குப் போதலால் அங்கே அது மிகுதிப்பட்டு எரியும். இவ்வாறு அகட்டினடியிலே உள்ள அனல் விடியற்காலத்திலே மிகுதிப் படும்போது, அதற்கு அருகாமையிலே உள்ள பித்தப்பையானது அவ்வனற் சுடரால் தாவப்பட்டுப் பித்தங் காதித்து மேலே பொங்குமென்றறிக. இங்ஙனமாகலின் மேல் இயல்களிற் சொல்லியதற்கும்இங்கே சொல்லியதற்குஞ் சிறிதும் மாறுபாடில்லையென்று சிக்கறுத்து உணர்க. இங்கே உரைத்தது கொண்டு விடியற்காலையிற் பகலவன் வெப்பம் மேலே படும்படி யிருத்தல் ஆகாது எனத் தெளிக. வெயில் வெப்பம் மேலே படப்பட உடம்பின்மேற் பரவிய சூடெல்லாந் திரண்டு அகட்டினடிக்குப் போய் அங்குள்ள உயிர்த் தீயினை மிகுதிப்படுத்தும்; அது மிகுதிப்பட அதன் பக்கத்தே உள்ள பித்தம் மிகுதிப்படும் வெயில் வெப்பம் மேற்படாவிட்டாற் காலையிற் பித்தம் தன் எல்லை கடவாதிருக்கும் என்க; அங்ஙனமாயிற் பகல் முழுதுமே வெயில் வெப்பம் பரவிக் கொண்டிருத்தலால், அது மேலே படும்படி எப்போதிருந்தாலும் அகட்டுத் தீ மிகுந்து பித்தத்தை எழுப்புமே எனின்; அற்றன்று, கதிரவன் மேற்பாலிற் சாயும்போது அதன் வெப்பங் குறைதலோடு எங்குங் குளிர் காற்றும் வீசுதலால், அகட்டுச் சூடு