❖ மறைமலையம் 1 ❖ |
நாம் காணும் பொருள்கள் நமது ஊனக் கண்ணாற் காண்கின்றபடியேதான் இருக்கும் என்று எண்ணுதலை விடப் பெரிய பிழை வேறு உலகில் இல்லை. இருள் மிக்க ஓர் இரவிலே மேல் நிமிர்ந்து வானத்தை நோக்குவோமானால் அங்கே அளவிறந்த வான்மீன்களைப் பார்க்கின்றோம் அல்லமோ? அவ்வான்மீன்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு பருமன் உடையதாய் இருக்கின்றது? ஓர் ஆலம்பழம் அளவுகூடப் பெரியதாயில்லை. ஆனால், அம் மீன்கள் இருக்குந் தொலைவையும், அவை தொலைவு நோக்கிக் கண்ணாடியிற் றோன்றும் பருமனையும் நுண்ணிதாகக் கணக்கிட்டுப் பார்த்தால், அவற்றுள் ஒவ் வொன்றும் நாம் இருக்கும் இம்மண்ணுலகைவிட எத்தனையோ மடங்கு பெரிய உலகங்களாயிருப்பதைத் தீரத் தெளியலாம். அவ்வளவு தான் போவானேன்? திருவண்ணாமலையிற் கார்த்திகை விளக்குக் கொளுத்த மேலேறிச் செல்வார் சிலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அன்றோ? அம் மக்கள் நுங்கள் கண்கட்கு எவ்வளவு சிறியராய்ப் புலப்படுகின்றனர்! அது கொண்டு அப்போது தோன்றியபடியே அம் மலைமேற் சென்ற அம்மக்கள் சிறு மரப்பாவைபோன்றிருப்பரென எண்ணல் கூடுமோ? கூடாதன்றே? அங்ஙனமே, நம் ஊன விழியாற் காணப்படும் எல்லாப் பொருள்களையும் அவ்விழியாற் காணப்படுகின்ற படியே இருக்குமெனக் கருதுதலும் அறிவுடையோர்க்குச் சிறிதும் பொருத்தமாகக் காணப்படமாட்டாது. பொருள்களின் இயற்கையைப் பலதிறப்பட்ட ஆராய்ச்சிகளாற் கண்டறிந்து தெளிவதே அறிவுடைமை க்குப் பயனாம். அவ்வாறின்றிக் ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ எனத் திரிவோர், அறிவு பாழ்பட்ட வீணரேயாவர் என்க.
இனிக், கதிரவனொளி வெளிப் பார்வைக்கு வெண்மை நிறம் உடையதுபோற் றோன்றினும், அஃது உலகத்திலுள்ள எல்லா நிறங்களையுந் தன்னுட் பொதிந்து வைத்திருக்கின்றது, மூன்று கோணமாக மேற்புறம் பிதுங்க அறுத்த ஒரு சிறு பளிங்குத் துண்டின் ஒரு புறத்தே கதிரவன் ஒளியின் ஒரு சிறு கதிரை நுழையவிட்டு, அது புறப்படும் மற்றைப் பக்கத்தே பார்த்தால் அக் கதிர் ஊதா, அவுரி, நீலம், பச்சை, மஞ்சள், கிச்சிலி, சிவப்பு முதலிய ஏழு நிறங்களாகப் பகுக்கப்பட்டுத்