❖ மறைமலையம் 1 ❖ |
ஞாயிற்று மண்டிலத்திற் காணப்படும் உண்மைகளை மறைத்துக் கூறிய முன்னோர் தம் அறிவு நூல்களாலும் பகலவனொளியில் எழுவகை நிறங்கள் அடங்கியிருக்கும் உண்மை அறிவுறுத்தப்பட்டிருத்தல் காண்க.
பகலவனொளியில் இந் நிறங்கள் அடங்கியிருப்பதன் பயனை ஒரு சிறிது ஆராய்தல் வேண்டும். முதலில் நமதுடம்பிலுள்ள உறுப்புக்களை உன்னித்துப் பாருங்கள்! மக்கள் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாச் சிறப்பினதாகிய இரத்தம் எந்த நிறமுடையடதாக இருக்கின்றது? சிவப்பு நிறம் உடையதாக அன்றோ இருக்கின்றது? மக்கள் உடம்பிற் பலதரப்பட்ட நிறங்களைக் கருத்தூன்றிப் பாருங்கள்! நம்மைச் சுற்றிலும் உள்ள மரஞ்செடிகொடிகளிற் பச்சைப்பசேல் என்ற நிறமும் பலவகைப் பட்ட மலர்களில் நீலம் ஊதா அவுரி மஞ்சள் கிச்சிலி முதலிய நிறங்களும் நம்முடம்பின் புறத்தே விளங்குதலையும் பாருங்கள்! மரஞ்செடி கொடிகள், செழிப்பாயிருக்குங்கால் அவற்றிலும் அவற்றின் பூக்களிலுங் காணப்படுகின்ற நிறத்தைப் பாருங்கள்! அஃது எவ்வளவு அழகியதாய்க் கண்ணைக் கவருந்தன்மை வாய்ந்து மிளிர்கின்றது! அவை செழிப்பின்றியிருக்கும்போ அவற்றின் நிறம் அங்ஙனம் அழகுற்றுத் தோன்றுகின்றதா? இல்லையே. மேலும், எவ்வகைப்பட்ட புற்பூண்டுகளும் வெயில் மிக்க வேனிற் காலத்திற் கொழுந்துளிர் நெருங்கிப், பூவும் காயும் பழமும் பொதிந்து, பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி தரும் பேரழகொடு பொலிதலும், வெயிலின்றி மப்பும் மங்கலும் மிகுந்து மழைத்திவலை தூவாநின்ற கார்கால பனிக்காலங்களில் அவை அங்ஙனமின்றி வெறுமையாக நிற்றலும் ஏன் என்று நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா? நிலத்தின் கொழுமையும் மழையின் வளமும் புற்பூண்டுகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதன வாயிருந்தும், அப் புற்பூண்டுகள் வேனிற் காலத்தில் மட்டும் பசுமைமிகுந்து இலையும் பூவுங் காயுங் கனியுந் துறுமி அழகுற்று விளங்குதல் என்னை? எருவும் நீரும் நிரம்பப் பெய்து மிகவுங் கருத்தாய் வளர்த்து வரும் ஒரு செடியை ஞாயிற்றின் ஒளி படாத ஓர் இருட்டறையில் வைத்தால் அது செழிப்பின்றி விளர்த்து அழகிழந்து குன்றித் தோன்றுதல் என்னை? மற்ற எல்லாப் பொருள்களின் உதவியாற் சூழப்பட்டிருப்பினும் ஒரு செடியின் செழுமையான