❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
வளர்ச்சிக்கும் அதன் கொழுமையான நிறத்திற்கும் ஞாயிற்றின் ஒளிதான் முதன்மையாவதென இவற்றால் அறியப் பெறுகின்றேம் அல்லேமோ? ஞாயிற்றின் ஒளி படாத இருட்டிடங்களில் வைத்து வளர்த்த செடிகள் நோய் கொண்டு வெளுத்துப் போக, அது படும் இடங்களில் உள்ளவை பச்சைப் பசேல் என்று கொழுவிய பசுமை நிறம் மிகுந்து, கண்ணைக் கவரத்தக்க பல வண்ணப் பூக்களாற் பொலிவுபெற்று, உணவுக்கு இனிய தித்திப்பான காய்களையுங் கனிகளையுங் குலைகுலையாகச் சுமந்து நறுமணம் வீசி, நறுந்தேன் ஒழுக்கிப் பல்வகைப் பறவைகளையும் மக்களையும் விருந்து கூட்டுண்ண அழைத்து விளங்குதலைக் காணுங்காற் கதிரவன் ஒளியே அவை முழுமைக்கும் ஏதுவாமென்பதைத் தெற்றென அறிந்து கொள்கின்றேம் அல்லேமோ? ஆகவே, இத்துணைப் பெருஞ்சிறப்பினவாகிய பகலவன் ஒளியும் அவ்வொளியில் அடங்கிய எழுவகை நிறங்களுமே உலகத்தின்கண் உள்ள எல்லா உயிர்களின் உடம்பின் வளர்ச்சிக்குங் கொழுவிய நிறங்களுக்கும் ஏதவாக இருக்கின்றமை நன்கு புலனாகும்.
இங்ஙனம் உலகத்திலுள்ள எல்லா உயிர்களின் உடம்பின் கொழுவிய நிறங்களையும் பகலவன் கதிரிலுள்ள ஏழு நிறங்களும் ஊட்டி வளரச் செய்தலால், அந்நிறங்களை மக்களாய்ப் பிறந்த நாமும் நம்முடம்பிலும் ஊட்டுவித்து வருவமாயின், அந்நிறங்களின் ஏற்றத்தால் நம்முடம்பு கொழுமை மிகுந்து நிண்டநாள் அழிவின்றியிருக்கும். நிறத்தின் கொழுமையே உடம்பின் கொழுமைக்கு வாயிலாய் உள்ளதென்பதை. நோய் கொண்டவன் உடம்பையும் நன்றாயிருப்பவன் உடம்பையும் ஒப்ப வைத்த நோக்குதலால் தெளிவாய் அறிந்து கொள்ளலாம். நோய் கொண்டவன் உடம்பு விளர்த்து நிறம் மங்கிப் பார்வைக்கு அருவருப்பினைத் தோற்றுவிக்கின்றது; நன்றாயிருப்பவன் உடம்பு ஒளி மிகுந்து மினுமினுப்பு உடையதாய் நிறஞ்சிறந்து பார்க்கப் பார்க்க அவாவினை விளைப்பதாய் இருக்கின்றது; ஒருவனது உடம்பின் இயற்கை நிறங் கரியதா யிருந்தாலும் வெண்மையாயிருந்தாலும் பொன் வண்ணமாயிருந்தாலுஞ் சிவப்பாயிருந்தாலும் அவை அவன் உடம்பு நன்றாயிருக்கையில் ஒளி ததும்பிப் பொலிவுடன் தோன்றுதலும். அது நோய்ப்பட்டிருக்கையில் ஒளி குறைந்து மழுங்கி வெளிறிக்