❖ மறைமலையம் 1 ❖ |
கிடத்தலுஞ் சிறிது உற்றுநோக்க வல்லார்க்கும் எளிதில் விளங்காநிற்கும். நிறத்தால் எவ்வளவு அழகிய உடம்பாயிருந்தாலும் அது நோயாற் பற்றப் பட்டிருக்கும்போது, பார்த்தற்கு மிகவும் அருவருப்புடைய தாயிருக்கும். நிறத்தால் அழகில்லாத உடம்பாயிருப்பினும் அது செம்மையாயிருக்குங் காற் பார்க்கப் பார்க்க விருப்பம் விளைக்கும் இயல்பினதாய் ஒளிவிரிந்து துலங்குவ தாயிருக்கும். இவ்வேறுபாடுகளை நாடொறும் வழக்கத்தில் வைத்துக் கண்டு கொள்க. ஆகவே. உடம்பின் செம்மைக்கும் நிறத்தின் கொழுமைக்கும் பிரியாத ஒற்றுமை உண்டென்பதும். எனவே உடம்பைச் செம்மைப்படுத்துவதற்கு நிறம் மழுங்காமல் அதனைத் துலங்க வைத்துக் கொள்ளல் வேண்டுமென்பதும் ஒவ்வொருவருந் தெளியவுணர்ந்து தங்கருத்திற் பதித்தல் வேண்டும்.
இனி, நம்முடம்பிலுள்ள உட்கருவிகள் புறக்கருவிகள் அத்துணையும் மேலே கூறிய எழுவகை நிறங்களோடுங் கூடியிருக்கின்றன. அக்கருவிகள் தம் இயற்கை குன்றாமற் செம்மையாயிருக்கும்போது அவற்றின்கண் உள்ள நிறங்களும் பொலிவு பெற்றுச் செம்மையாயிருக்கும்; அவை தமது நிலைகெட்டுப் பிணிப்படும்போது அவற்றின் நிறங்களும் ஒளிகுன்றி மங்கிவிடும். ஆகையால், அங்ஙனஞ் சீர் குலைந்து போன உறுப்புகளைத் திரும்பவுஞ் சீர்பெறத் திருத்திச் செம்மைப்படுத்தல் வேண்டுமானால், அது நிறம் ஊட்டுதலாகிய எளிய முறையால் இனிது செய்து கொள்ளப்படும். பாருங்கள்! கோயிற் கொடு முடிகளுக்கும். அதில் அமைத்து வைக்கப்பட்டிருக்கும் உருக்களுக்கும், நிலை கதவுகளுக்கும். மற்றுமுள்ள தட்டுமுட்டுகளுக்கும் பலவகையான வண்ணங்கள் தீற்றுகின்றார்கள். வண்ணந் தீற்றுவது அழகுக்காக மட்டும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். அது பிசகு மழையாலுங் காற்றாலும் வெயில் வெப்பத்தாலும் அவ்வுருக்களும் ஏனைய தட்டமுட்டுகளுஞ் சிதைந்து போகாமலிருத் தற்கும் அங்ஙனம் வண்ணங்கள் பூசப்படுகின்றன; அவ்வண்ணங்கள், அவை காற்று மழை முதலியவற்றாற் சிதைந்து போகாமல் அவற்றைப் பாதுகாக்கின்றன.