பக்கம்:மறைமலையம் 1.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
173



இன்னும் இயற்கைப் பொருள்களையும் உற்றுப் பாருங்கள்! உயர்ந்த நெற்றாளின் மேற்புறத்தில் பொன் வண்ணமான ஒரு மினுக்குப் பூசப்பட்டிருக்கின்றது; அம்மினுக்கு இல்லையாயின் அந்நெற்றாள் சிற்சில நொடி நேரங்களுட் சிதைந்து அழிந்து போவது திண்ணம். செல்வர்கள் வீட்டிற் செய்து வைக்கப்படும் மேசை நாற்காலி அலமாரி முதலான மரத் தட்டுமுட்டுகளின்மேல் மினுக்கெண்ணெய் புசுகிறார்களே; அஃது ஏன்? வெறும் பளபளப்பின் பொருட்டாகவா? இல்லை, இல்லை; அத்தளவாடங்கள் பூச்சிகளாற் றின்னப்பட்டுச் சிதையாமல் இருத்தற்கே அவ்வாறு மினுக்கெண்ணெய் பூசுகின்றார்கள். இவற்றின் இயல்புகளை யெல்லாம் ஆராய்ந்து பார்க்குங்கால், வண்ணப்பூச்சுப் பொருள்களைப் பாதுகாத்தற்கு இன்றியமையாத கருவியாமென்பது நன்கு பெறப்படும். இதுபோலவே, நம்முடைய உடம்பினுள் அமைந்த பல்வகை உறுப்புகளும் நோய்புழுக்கள் நச்சுப் புழுக்கள் முதலியவற்றால் தின்னப்பட்டுச் சிதைந்து போகாமல் இருக்கும் பொருட்டே, அருட் பெருங்கடலான ஆண்டவன் அவ்வுறுப்புகள் ஒவ்வொன்றற்கும் ஒவ்வொரு நிறத்தை அமைத்து வைத்திருக்கின்றார். அவ்வுறுப்புகளில் அமைந்த அவ்வெழுவகை நிறங்களும் ஒன்றினொன்று ஏறாமலுங் குறையாமலும் ஒத்து நிற்கும் வரையில் உடம்பு நலம்பெற்று, நெடுநாள் உயிர் இருத்தற்கு உதவியாய்ப் பயன்டும் அவ்வாறின்றி அவற்றுள் ஒன்று மிகுந்தும் ஒன்று குறைந்துந் தோன்றுமாயின், அதனால் அக் கருவிகள் சீர்குலைந்து சிதைய, அக்கருவிகளால் திரட்டப்பட்ட உடம்பும் விரைவில் அழிந்து போகும்.

அங்ஙனமாயின், நிறங்களின் ஒத்தநிலை கெடாமல் அதனைப் பாதுகாத்தற்கு எவ்வெவ் வண்ணங்களை எவ்வெவ்வாறு அவற்றின்மேற் பூசுதல் வேண்டுமெனின்; நம்முடைய உடம்பும் அதில் அமைந்த கருவிகளும் மக்களாற் செய்யப்பட்ட செயற்கைப் பொருள்களாகாமற் கடவுளாற் படைக்கப்பட்ட இயற்கைப் பொருள்களாயிருத்தலால், மற்றத் தளவாடங்களுக்கு வண்ணந் தீற்றுவது போல் இவைகளுக்கும் வண்ணந் தீற்றுதல் ஆகாது. செயற்கைப் பொருள்களொடு செயற்கைப் பொருள்களும் இயற்கைப் பொருள்களொடு இயற்கைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/206&oldid=1597588" இலிருந்து மீள்விக்கப்பட்டது