❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
இவ்விரண்டில் வெப்பம் என்பது பருப்பொருள்களை நுண்ணியவாக்கி விரிவுசெய்யுஞ் சூடேயாகும்; தட்பம் என்பது நுண்பொருள்களைப் பரியவாக்கி ஒருங்கு திரட்டுங் குளிர்ச்சியேயாகும். இவ்வெப்ப தட்பங்கள் தம்மில் மிகாமலும் குறையாமலும் ஒத்து நிற்குமாயின், இவ்வுலகமாகிய பேருடம்பும் இவ்வியாக்கையாகிய சிற்றுடம்புஞ் சிதைவின்றி அழியாமல் நிலைபெற நிற்கும்; அவ்வாறின்றி ஒன்று மிகுந்து ஒன்று குறையுமாயின் இவையெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் நிலைகுலைந்து அழிந்துபோம்.
நாம் இருக்கும் நிலவுலகத்திற்கு வெப்பத்தைத் தருவது ஞாயிறு; தட்பத்தைத் தருவது திங்கள். இஞ்ஞாயிறு திங்களின் இயக்கங்களினாலேயே வெப்ப தட்பங்கள் ஒரு நிலைப்பட்டு இந் நிலவுலகத்தை நிலைபெறுத்தி வருகின்றன. இனி, ஞாயிற்றுக்கலை திங்கட்கலைகளின் ஓட்டங்களினாலேயே வெப்ப தட்பங்கள் நமதுடம்பிலும் ஒருநிலைப்பட்டு நிற்கின்றன என்பதை மூன்றாம் இயலில் உயிர்காற்றுப் பழக்கத்தைப் பற்றிக் கூறியவழி நன்குவிரித்து விளக்கினேம்.
இனி, அத் தன்மையவான வெப்ப தட்பங்கள் அங்ஙனம் இயங்கும்போது, வெப்பத்திற்குரிய சிவப்பு நிறமுந் தட்பத்திற்குரிய நீலநிறமும் பரவித் தோன்றும் உண்மையை யாவரும் நன்றாகக் கருத்திற் பதித்துக் கொள்ளல் வேண்டும். நமதுடம்பில் வெப்ப தட்பங்கள் ஒரு நிலைப்பட்டு நிற்கும்போது உடம்பும் மிகவுஞ் செம்மையுடையதாயிருக்கு மாகலின், அவற்றின் நிறங்களான சிவப்பு நீலங்களும் ஒருநிலைப்பட்டு நிற்கும். அவ்வாறின்றி உடம்பிற் சூடு மிகுதிப்பட்டால் உடம்பெங்குஞ் சிவப்புநிறம் மிகுந்து தோன்றும்; குளிர்ச்சி மிகுதிப்பட்டால் நீலநிறம் மிகுந்து தோன்றும். சிவப்பு நிறம் மிகுதிப்படுதலால் வெப்பு நோயும் தசை வற்றி யிளைத்தலும் எலும்புருக்கி நீரிழிவு கறையிழிவு சொறிசிரங்கு முதலிய நோய்களும் உண்டாகும்; பித்தமும் பெருகி உண்டவுணவை அறப்பண்ணாததுடன், மயக்கங் கிறுகிறுப்பு மஞ்சட்காமாலை முதலிய நோய்களையும் விளைவிக்கும். நீலநிறம் மிகுதிப்பட்டால் கோழைக்கட்டும் உடம்பு அளவுக்குமேற் பருத்தலுந் திமிர்ப்பு பொருத்துப் பிடிப்பு செரியாமை நீர்க்கட்டு முதலிய