❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
நுண்ணுடம்பின் நோயை நீக்க வல்லதாகும். அவ்வாறாயின் உயிர் தன் நினைவை வலுப்படுத்து முறையாங்ஙனமெனிற் கூறுதும்; உலகத்திலுள்ள ஆற்றல்களெல்லாம் வெப்ப தட்பங்களுள் அடங்குமென்பதும், அவற்றின் நிறங்களெல்லாஞ் சிவப்பு நீலங்களுள் அடங்கு மென்பதும் மேலெடுத்து விளக்கினாமாதலின், கட்புலனாகாத வெப்ப தட்பங்களை ஒத்த நிலையில் வைத்து நினைவில் அழுத்த வேண்டுபவர்கள் கட்புலனாகும் அவற்றின் நிறங்களான சிவப்பு நீலங்களையே இடைவிடாது அகக்கண்ணாற் கண்டு நினைவிற் பதித்து வரல் வேண்டும்.
இனி, உயிரில்லாத வெறு நிறங்களைமட்டும் நினைத்தலால், அவற்றை நினைக்கும் உயிரும் நுண்ணிய ஆற்றல் பெறாமல் தன்னால் நினைக்கப்பட்ட வெறு நிறங்களைப்போல் வெறும் பருப்பொருளுருவாய் விடுமாதலால். அங்ஙனம் வெறு நிறங்களை மட்டும் ஒத்தநிலையில் வைத்து நினைத்தலும் ஆகாது. பேரறிவும் பேரருளும் பேராற்றலும் பேருயிரும் நிறைந்த கடவுளை ஓர் அருளுடம்பு உடையராகக் கருதி. அவ்வருளொளி யுடம்பின் வலப்புறத்தே செந்நிறமும் இடப்புறத்தே நீலநிறமும் விளங்கக் கண்டு. அவ்விளக்கத்தில் தமது நினைவை நிலை பெயராது பதித்து வைத்தலே பெருநலத்தைப் பெற விரும்பும் எல்லா உயிர்களுங் கடைப் பிடித்துச் செயற்பாலதாகிய மேன் முறையாம். இனிச் சிவப்பு நிறம் வெய்ய ஆற்றலாகலின் அதன் குறியான ஆண் உருவை அவ்வருளுடம்பின் வலப்புறத்தும், நீலநிறந் தண்ணிய ஆற்றலாகலின் அதன் குறியான பெண் உருவை அதன் இடப்புறத்துங் கண்டு, நினைவை ஒருவழிப்படுத்தலே, இம்மை மறுமைக்குரிய எல்லா நலங்களையும் எல்லா இன்பங்களையும் பெறுதற்கு எளிய நெறியாம். சைவ சித்தாந்த மெய்ந்நூல் ஒன்றுமட்டுமே இம்மறை பொருளைத் தெளியவுணர்ந்து கடவுளை ஆண்பெண் உரு ஒருங்கு இயைந்த அம்மையப்பர் வடிவமாக (உமாமகேசுர மூர்த்தமாக) வைத்து வழிபடுகவென வகுத்தது; உலகத்தி லுள்ள ஏனை மதங்களும் நூல்களும் இப்பெருமறையினைச் சிறிதும் உணர்ந்தனவில்லை. அந்தோ!