❖ மறைமலையம் 1 ❖ |
நிலைபெயராப் பேரின்பத்தை இம்மை மறுமை யிரண்டிலும் ஒருங்குபெற வேண்டுவார் மதப்பற்று விட்டு ஆண் பெண் வடிவு ஒருங்கியைந்த கடவுளின் அருளுடம்பில் நாட்டம் வைப்பர்களாயின், அவருடம்பிற்கும் உயிருக்கும் எவ்வகைப்பட்ட நோயும் உண்டாகாது; சோர்வினால் வரினும் விரைவில் அது நீங்கும். இன்னும் இந்நிறத்துருக் கடவுள் வழிபாட்டைச் செய்யும் முறையும் அதில் உள்ள மறைகள் சிலவும் பொதுநிலைக் கழக மேற்படி மாணவர்க்கு இனிது அறிவுறுத்தப்படும்.
இனி, இவ்வழிபாட்டால் நுண்ணுடம்பின்கண் உள்ள நோய் நீங்கும். இவ்வழிபாடு முதிர முதிர உயிரின் நினைவு அதன்கண் மிகுதியும் பதிந்திடுமாகலின் அதனால் நுண்ணுடம்பு மிகுதியும் இயக்கப்பட்டுப் பருவுடம்பின் கண் உள்ள நோயையும் நீக்கி அவ்வுடம்பையும் அமிழ்த வடிவாக்கும். அங்ஙனமாயின் நினைவு ஒன்றினாலேயே நுண்ணுடம்பை இயக்கி, அவ்வழியே பருவுடம்பின்கண்ணுள்ள நோய்களை முற்றும் நீக்கிக் கொள்வது எளிதில் வாய்ப்பதாகவும். வெளியே நிறக் குப்பிகளில் நீர்நிரப்பி வெயிலில் வைத்தெடுத்து அந் நீரை மருந்தாக அருந்துக என்று மேலே கூறியது என்னை யெனின்! நினைவை அவ்வருளுரு வழிபாட்டில் நிறுத்தி அதனை வலிவுசெய்து கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவர்களுக்குப் புறத்தே நிறக்குப்பிகளின் நீரை அருந்துதல் வேண்டா. ஆனால் உலகத்தில் உள்ளவர்களில் எத்தனைபேர் அவ்வருளுரு வழிபாட்டில் உறைத்து நிற்க வல்லவர்களென்று ஆராய்ந்து பார்ப்போமாயின். நூறாயிரவரில் ஒருவரைக் காண்பதும் அரிதாகும். பெரும்பாலும் எல்லாரும் புறப்பொருள் களைக் கொண்டு தீர்வு தேடுபவர்களாகவே யிருத்தலால், அவரெல்லாம் நோய் நீங்கிப் பிழைத்தல் வேண்டிப் பருவுடம்பிற் கியைந்த பருமுறையுங் கைக்கொள்ள வேண்டுவது இன்றியமையாத தாயிற்று. நிறக்குப்பிகளில் அடைத்த நீரை மருந்தாகப் பருகுதலாற், பருவுடம்பின் உறுப்புகளிற் பரவிய நிறங்களின் ஏற்றக் குறைச்சல் போய் அவை ஒரு நிலைப்பட்டு நின்று உடம்பையும் நிலைபெறச் செய்யும்; இதனொடுமட்டும் நின்றுவிடாமல் சிவப்புநீலங் கலந்த அருளுருவையும் வழிபட்டு வந்தால் நுண்ணுடம்பிலுள்ள நுண்நிறங்களின் ஏற்றக்