பக்கம்:மறைமலையம் 1.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180



7. நீர்

மக்களுயிர்வாழ்க்கைக்குக் காற்றும் நெருப்பும் பல வகையானும் இன்றியமையாததாதலை மேல் இயல்புகளில் இனிது விளக்கிப் போந்தாம். இனி அவற்றிற்கு அடுத்த படியிலே முதன்மையாக வைத்து உரைக்கற்பால தாகிய நீரின் சிறப்புகளைப் பற்றி இவ்வியலிற் சிறிது பேசுவாம். ஏனென்றாற், காற்றில்லாமல் இரண்டு முதற் பத்து நிமிடங்கள் வரையிலும் மாந்தர் உயிர் பிழைத்திருக்கக் கூடுமென்றும். நீர் அருந்தாமல் மூன்று, நான்கு அல்லது ஐந்து நாட்கள் உயிர்வாழலாமென்றுந், தூக்கம் இன்றி ஏழுநாள் உயிரோடிருக்கலாமென்றும், உணவு கொள்ளமற் பத்து அல்லது பதினைந்து நாட்கள் உயிர்வாழ்ந் திருக்கக் கூடுமென்றும் இக்காலத்து உடம்பு நூல் வல்லார் கூறுகின்றனர். ஆகவே, மக்களுயிர்வாழ்க்கைக்கு நீர் எவ்வளவு இன்றியமையாப் பொருளாயிருக்கிறதென்பது எவர்க்கும் இனிது விளங்கற் பாலதேயாம்.

இனி, மக்களுயிர்வாழ்க்கைக்கு மட்டுமன்று, இந் நிலவுலகத்துள்ள, எல்லாவுயிர்களுக்குமே நீரானது மிகவுந் தேவையுள்ளதாய் இருக்கின்றது. பாருங்கள்! உயிர்த் தொகுதிகளுள் மிகவுங் கீழ்ப்படியான நிலையில் இருக்கும் மரஞ் செடி கொடிகளும் புற்பூண்டுகளுங்கூடத் தண்ணீரையே பெருங்கருவியாய்க் கொண்டு உயிர் பிழைத்து வருகின்றன. பார்வைக்கு வெறுமையாய்த் தோன்றுந் தீஞ்சுவைத் தண்ணீரைப் பருகி அவைகளெல்லாங் கவடுங் கோடுங் கொம்பும் வளாருந் துளிரும் இலையும் பூவும் பிஞ்சுங் காயுங் கனியுமாய்ச் செழித்து எவ்வளவு பொலிவாய்த் தோன்றுகின்றன! நாலைந்து ஆண்டுகள் தொடர்பாக மழை பெய்யாதுவிட நிலம் வறண்டு போமாயின் அவைகளெல்லாங் கரிந்து பட்டுப் போகும் என்பது எவர்க்குத் தாந் தெரியாது! இன்னும், அம்மரங்களிற் உறையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/213&oldid=1571430" இலிருந்து மீள்விக்கப்பட்டது