❖ மறைமலையம் 1 ❖ |
கொண்டு போய். அவைகளுக்குக் கொடுத்துப் பின் அவைகள் கழிக்குஞ் சக்கையை அங்ஙனமே தான் சுமந்தெடுத்து வந்து மூச்சின் வழியாக வெளிப்படுத்துகின்றது. ஈதென்னை? எலும்பு முதலிய அக்கருவிகள் இரத்தத்தால் நனைக்கப்படுதல் மட்டும் போதாதோ? அவை அதனால் உணவூட்டப்படுதலும் வேண்டுமோ? என வினவின், அவ்வியல்பினை ஒரு சிறிது விளக்குவாம்.
மக்களுடைய முயற்சிகளெல்லாவற்றையும் பகுத்துப் பார்த்தால் அவை யெல்லாம் நினைத்தல், பேசல், செய்தல் என்னும் மூன்று கூற்றிலே அடங்கும். இம்மூவகைத் தொழிலும் நடை பெறுங்கால் மக்கள் உடம்பிலுள்ள ஆற்றல்கள் செலவழிந்தே போகின்றன. நினைக்குங் காலத்து மூளையிலுள்ள ஆற்றலும் பேசுங்காலத்து வாய் குரல்வளை மார்பு முதலியவற்றின் ஆற்றலுந் தொழில் செய்யுங்காலத்து நரப்புக் கட்டுகள் எலும்புகள் முதலியவற்றின் ஆற்றலும் வெளியே கழிந்து செலவாய்ப் போகின்றன. இங்ஙனம் உடம்பின் கண்ணுள்ள ஆற்றல்கள் கழியக்கழியத் திரும்பவும் அவ்வாற்றால்களை நிரப்பினாலல்லாமல் உடம்பு வலிவு குன்றி அழிந்துபோகும். இதனை ஓர் எடுத்துக்காட்டால் விளக்குவாம். இப்போது நமக்கு மிகவுந் தெரிந்ததாயுள்ள நீராவி வண்டியின் இயக்கத்தை உற்றாராய்ந்தால் நமதுடம்பின் இயக்கமுறையும் நன்றாய்ப் புலப்படும். நீராவி வண்டியின் உருளையிற் கோக்கப் பட்டிருக்கும் இருப்புக் கோலின் முனை உள்ளிருந்து உதைக்கும் நிராவியால் உந்தப்பட்டு அசையவே, அம்முனையொடு தொடர்புடைய அக் கோலும் அக்கோலோடு இயைந்திருக்கும் உருளைகளும் அசைகின்றன: அவ்வசைவினாலேதான் வண்டி யோடுகின்றது. இதன்கண் உற்றுநோக்கற்பாலது யாது? நீராவியேதான். இருப்புக் கோலை யசைக்கும் நிராவியானது அங்ஙனம் அதனை அசைக்கும்போ தெல்லாம் வெளியே கழிந்து போகின்றது; அவ்வாறு இடைவிடாது அது கழியக் கழியப் பின்னும் அஃதுள்ளேயிருந்து உண்டாக்கப்படுகின்றது. எங்ஙனமென்றால்; அவ்வண்டியின் அகத்தே பெரியதோர் அடுப்பும், அவ்வடுப்பின்மேற் பெரியதொரு கொப்பரையும் இருக்கின்றன. வண்டியானது எத்தனைமணி நேரம் ஓட