பக்கம்:மறைமலையம் 1.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
183

வேண்டுமோ அதுவரையில் அவ்வடுப்பை எரிய விடுவதுடன் அக்கொப்பரையிலும் நீர் நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அடுப்பு மிகுதியாய் எரிய எரிய மேலுள்ள கொப்பரையின் நீர் காதித்து ஆவியாக மாறி உள்ளமைக்கப்பட்டிருக்கும் வலிய இருப்புக் குழாய்களில் நிறைந்து நிறைந்து, பின் அங்கிருக்க இடங்காணாமையின் வெளியே புறப்பட முயல்கின்றது; அங்ஙனம் நீராவி வெளிப்படுதற்கு அமைத்த பேழையிலே உருளை இருப்புக்கோலின் முனை அடைப்பாய் நிற்றலால் அதனை உதைத்துத் தள்ளிக் கொண்டு அது வெளிப்படுகின்றது. இவ்வாறு நீராவியானது உருளை யிருப்புக் கோலைத் தள்ளிக் கொண்டு வெளிப்படுவதனாலேதான் உருளைகள் சுழன்று வண்டி ஓடுகின்றது. இங்ஙனமெல்லாம் நீராவி வெளிப்பட வெளிப்படப் பின்னும் பின்னுங் கொப்பரையிருலிருந்து நீராவி கிளம்பி நிறைந்து கொண்டேயிருக்கும். புறத்தே கழிந்துபோகும் நீராவியின் அளவுக்கு ஏற்றபடி ஓயாமல் அகத்தே பின்னும் பின்னும் அஃது உண்டாக்கப்படா விட்டால் வண்டி ஓட்டந் தவிர்ந்து நின்றுவிடும். இதுபோலவே நமது உடம்பின் இயக்கமும் அறியற்பாலதாகும். நமதுடம்பை ஒரு நீராவி வண்டியாக எண்ணிக் கொள்ளல் வேண்டும்; இவ்வுடம்பின் புறத்தே அமைக்கப்பட்டிருக்கும் மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளையும் ஐந்து உருளைகளாகவும். அவ்வைம் பொறிகளிலும் இயைந்து நிற்கும் மனத்தை அவ்வுருளைகளோடு தொடர்புபட்டு நிற்கும் இருப்புக் கோலாகவும், மனத்தோடு ஒன்று பட்டிருக்கும் மூளையை அவ்விருப்புக்கோலின் முனையாகவும், அம் மூளையை உந்தும் உயிராற்றலை நீராவியின் ஆற்றலாகவும், அவ்வுயிராற்றலை அகத்தேயுள்ள எலும்பு தோல் நரம்பு சதை முதலியவற்றிற் செலுத்தித் தோற்றுவிக்கும் இரத்தத்தைக் கொப்பரையிலிருந்து பாயும் நீராவியாகவுந், தீனிப்பையை அக் கொப்பரையாகவுந். தீனிப்பையின் கீழுள்ள அடியிடத்தையும் அதிலெழும் நுண்ணிய அனலையுங் கொப்பரையின் கீழ் அமைந்த அடுப்பாகவும் அதில் எரியும் நெருப்பாகவுந் தீனிப்பை யிலிடும் உணவையும் நீரையும் விறகுந் தண்ணிருமாகவும் பொருத்திப் பார்த்துக்கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/216&oldid=1597621" இலிருந்து மீள்விக்கப்பட்டது