பக்கம்:மறைமலையம் 1.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
185

நிமிர்த்து ஒன்றோடொன்றைப் பொருத்திக் கொண்டு சன்றால் அவை பத்து மைல் நீளமுள்ளனவாய்க் காணப்படுமென்றும் இஞ்ஞான்றை உடம்புநூல் வல்லார் கணக்கிட்டுச் சால்கிறார்கள். இவ்வியர்வைக் குழாய்கள் இரத்தத்திற் பயன்பட்ட பாகம் போக மிகுந்த சக்கையை வியர்வைத் துளிகளாக வெளிப்படுத்தும் உதவி முயற்சியுடையனவாய் அமைந்திருக்கின்றன. வியர்வைத் துளிகளாக இங்ஙனம் வெளிப்படுத்தப்படும் அழுக்குகள் நச்சுப் பொருள் நிறைந்தனவாயிருத்தலால். அவை அவ்வப்போது உடனுக்குடன் வெளிப்படுத்தப்படாமல் இரத்தத்திலே நின்று விடுமாயின். அதனால் இரத்தம் முறிந்து நஞ்சாகிப் பல்வகை நோய்களை விளைவிக்கும். ஆகவே, இரத்தத்தினின்று பிரித்தெடுக்கப்படும் நஞ்சாகிய சக்கையை இச்சிறுகுழாய்கள் தோலின் மேற்புறத்தே கொண்டுவந்து தள்ளுகின்றன. இவ்வாறு தோலின்மேலே கொண்டுவந்து தொகுக்கப்படும் நச்சுப் பொருளான அழுக்கை அடிக்கடி கழுவித் துப்புரவு செய்தற்கு நீர் மிகவும் பயன்படுகின்றதன்றோ?

இன்னும். உடம்பினுள்ளே தீனிப்பையில் இடப்பட்ட உணவு வலிவுள்ள பாலாக மேலே பிரித்தெடுக்கப்பட்ட பிறகு. கழிபட்ட மலமாகிய சக்கை மலக்குடரிற் சேர்ந்து தங்கி விடுகின்றது. நீர் மிகுதியாக அருந்துகின்றவர்களுக்கு இந்த மலச்சக்கை இளக்கமுடையதாகி வெளிப்பட்டு விடும்; அதனை நன்கு அருந்தாதவர்களுக்கு அச்சக்கை வலிவாய் இறுகிக் குடலிலேயே தங்கியிருக்கும். உடம்பிற் கலப்பதற்கு ஆகாவென்று விலக்கப்பட்ட நச்சுப் பொருள்கள் அத்தனையும் இந்த மலச்சக்கையிற் சேர்ந்திருத்தலால், இது நெடுநேரங் குடலில் தங்குதல் ஆகாது; அங்ஙனந் தங்குமேல் அதிலுள்ள நச்சுப் பொருள்கள் திரும்பவும் இரத்தத்திற் கலந்து கொடிய பல நோய்களை வருவிக்கும். ஆகவே, உடனுக்குடன் அதனைத் தண்ணீர்விட்டுக் கழுவித் துப்புரவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு உடம்பின் அகத்தேயுள்ள அழுக்குப் பொருள்களை அகற்றித் துப்புரவு செய்தற்கும் நீரே இன்றியமையாததாய் இருக்கின்றது.

இனிப், பசியெடுக்கும்போதெல்லாம் நமக்கு வேண்டப்படுவனவாய் உள்ள பல்வேறு உணவுப் பொருள்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/218&oldid=1597628" இலிருந்து மீள்விக்கப்பட்டது