பக்கம்:மறைமலையம் 1.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
186

❖ மறைமலையம் 1 ❖

பதப்படுத்தி நாவுக்கு இனிமை ஊறக் குழைத்து ஊட்டுவது எது? நீரேயன்றோ? நெற்பயிரையும், அவரை, துவரை, உழுந்து, கொள் முதலான கூலப்பயிர்களையுங் கொழுமையாக வளரச் செய்வதும் நீரே. அப் பயிர்களின் பயனாய் வரும் மணிகளை வேவுவித்துச் சுவையாக்கித் தருவதும்நீரே. இவையேயன்றிக், குழம்பு, சாறு, குடிநீர் முதலான பருகுதற்கு இனிய நெகிழ்ச்சிப் பொருள்களையும், அவியல், துவையல் முதலான நன்சுவைப் பொருள்களையும் பாகப்படுத்திக் கொள்ளுதற்குப் பயன்படுவதும் நீரே. இன்னும், நமக்குச் சிறந்த உணவுப் பொருள்களாயுள்ள கத்தரி, புடல், பீர்க்கு, பாகல் முதலியவற்றின் காய்களையுங், கொட்டிக் கிழங்கு, உருளைக்கிழங்கு வள்ளிக்கிழங்கு முதலான கிழங்கு வகைகளையும், வாழை, மா, பலா, எலுமிச்சை, நாரத்தை முதலியவற்றின் கனிகளையும் நமக்கு விளைத்துத் தருவதும் நீரேயாகும்.

இனி, இவை யெல்லாவற்றினுஞ் சிறந்ததாகிய ஒரு பெரும்பயனும் இடைவிடாது நாம் நீரினால் அடைந்து வருகின்றோம். வாயினின்றும் உள்ளிறங்கும் உணவானது எவ்வளவு உயர்ந்ததுஞ் செழுமையுள்ளதுமாயிருந்தாலும் அது தீனிப்பையிற் சென்ற அளவிலே நன்கு அரைக்கப்பட்டுச் செரியாவிட்டால், அது சிறிதும் பயினில்லாமற் போவதோடு உடம்பிற் பலவகை நோய்களையுங் கிளைக்கப் பண்ணி இறப்பினையும் விரைவில் வருவிக்கும். ஆகையால், வாயிலிருந்து இறங்கும் உணவானது உடனே செரித்தற்குரிய ஓரரிய ஏற்பாட்டை இறைவன் நமது வாயினிடத்திலேயே செய்து வைத்திருக்கின்றான். அஃது எதுவென்றால், வாயில் இடை யறாது சுரந்து கொண்டிருக்கும் உமிழ்நீரின் சேர்க்கையேயாகும். இக்காலத்து உடம்புநூல் வல்லார்கள் வாயிலிருந்து ஓயாது ஊறும் உமிழ்நீரிலே, உண்ட உணவை அறப்பண்ணுதற்குரிய தன்மைகள் அமைந்திருக்கின்றன வென்றும், அவ்வுமிழ் நீரில் முற்றுந் தோய்ந்து செல்லும் உணவு தீனிப்பையிலிறங்கின அளவிலே செரித்து விடுமென்றும் மிகவும் விரிவாக விளக்கி வருகின்றனர். அகவே, அத்துணைச் சிறந்ததாகிய உமிழ்நீரை வாயிலூறச் செய்வதும் நாம் பருகுந் தண்ணீரேயாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/219&oldid=1575962" இலிருந்து மீள்விக்கப்பட்டது