பக்கம்:மறைமலையம் 1.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
189

இயற்கையில் நிகழும் நிகழ்ச்சியை நமது வழக்கத்தில் நேரே வைத்துக் காணவேண்டுமாயின் அதனைப் பின்வருமாறு செய்து பார்க்கலாம். ஒரு பானையிற் கடல்நீரை நிரப்பி, அப்பானையின் வாயை நடுவே ஒரு சிறுதுளையுள்ள மூடி ஒன்றால் இடுக்கில்லாமற் சுற்றிலுஞ் செறிய மூடி, அம் மூடியின் நடுவிலுள்ள புழையில் நாலைந்தடி நிகளமுள்ள ஒரு குழாயை இணைத்து, அக் குழாயின் மற்றொரு முனையை அங்ஙனமே மூடப்பட்ட வேறொரு வெறும் பானையின் மூடித்துளையிற் பொருத்திவிட்டுக், கடல்நீர் நிறைந்த பானையின் கிழே நெருப்பிட்டு நன்றாய் எரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு எரிக்க எரிக்கக் கடல் நீர்ப்பானையிலுள்ள நீரெல்லாங் கொதித்து ஆவியாகமாறி மேலெழும்பி மூடியின் துளைவழியே குழாயினூடு சென்று, அக்குழாயில் மற்றொரு புறத்திற் பொருத்தப்பட்டிருக்கம் மற்றைப் பானையில் நிறையும்; ஆவி நிறையும் அப்பானையின்மேற் குளிர்ந்தநீரை ஊற்றிக் கொண்டிருந்தால் அதன் குளிர்ச்சியானது பானையின் உள்ளிருக்கும் ஆவியிற் படும்; அதனால் அவ்வாவி இறுகி மறுபடியுந் தண்ணீராகி அப் பானையுள் நிறைந்திருக்கும்; இங்ஙனங் கடல்நீர்ப் பானையிலுள்ள நீரெல்லாம் வற்றி ஆவியாக மாறிக் குழாயின் வழியே சென்று மற்றைப் பானையில் திரும்பவும் நீராய் மாறிவிடும்படி செய்தபின், தீயை அவித்துக் கடல் நீர்ப்பானையைத் திறந்து பார்த்தால், அதனுள் உப்பு மட்டும் இருத்தல் காணலாம்; அதன் பின்னர் முன்னே வெறிதாய் வைத்த மற்றைப் பானையைத் திறந்து பார்த்தால் அதனுள் தண்ணீர் நிறைந்திருத்தல் காணலாம். அத் தண்ணீரை நாவிலிட்டுச் சுவைத்தால் அது மழைநீரையொப்ப மிகவும் இனிதாயிருத்தலுங் கண்டு தெளியலாம். இங்ஙனங் கடல்நீரைக் காய்ச்சிப் பார்க்கும் முறையாற், கடல்நீர் ஞாயிற்றின் வெப்பத் தால் ஆவியாக மாறுவதும், பின்னர் அது குளிர்காற்றின் சேர்க்கையால் மழையாக நிலத்தில் இறங்குவதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளிதின் உணரப்படும். இவ்வாறெல்லாம் பார்த்துணர வல்லார்க்கு மிகப் பெரிய நீர்நிலையாகிய கடலே ஏனை எல்லா நீர் நிலைகளுக்கும் பெரிய தொரு நிலைக்களனாய் உள்ளதென்னும் உண்மை புலப்படா நிற்கும். இத்துணைச் சிறந்த நிலைக்களனாய் இருந்துங் கடல்நீர் தன்னிலையிலே நமது உலக-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/222&oldid=1597641" இலிருந்து மீள்விக்கப்பட்டது