பக்கம்:மறைமலையம் 1.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
190

❖ மறைமலையம் 1 ❖

வொழுக்கத்திற்குப் பயன்படுவ தாயில்லை. அருட் பெருங்கடலாகிய ஆண்டவன் வெங்கதிர் மண்டிலத்தை அமைத்து அதன் கணிருந்து வருஞ்சூட்டினால் அக்கடல் நீரை ஆவியாக மாற்றி, அதிலிருந்த உப்பைப் பிரித்துப் பின்னர் அவ்வாவியை மழையாக மாற்றிப் பெய்வித்து அதனைப் பல்லாற்றானும் பயன்படச் செய்கின்றான். அது நிற்க.

இனி, மழையாய், இறங்கிய நீர் அருவிகளாகவுங் கால்களாகவும் ஆறுகளாகவும் ஓடிப் பலமுகமாய்ப் பரவுகின்றது; கிணறுகளையும் மடுக்களையுங் குளங்களையும் ஏரிகளையும் நிரப்புகின்றது; நிலத்தினுள்ளே சுவறி, வறந்த வெயிற் காலத்தில் நீர் ஊற்றாய் வெளிப்படுகின்றது. இங்ஙனம் நீர் நிலைகள் எல்லாவற்றிலும் உள்ள நீரெல்லாம் மழைநீரேயன்றிப் பிறிதில்லை, ஆயினும். அந்நீர் தான் சேர்ந்த நிலத்தின் றன்மையாற் பலவேறு சுவையும் பலவேறு நிறமுமுடையதாய் மாறுகின்றது, இந்நிலவுலகத்தில் இயற்கையாய் உள்ள தண்ணிருள் மழைநீரே மிகவுந் தூயதாகுமென்று இயற்கைப் பொருள் நூலாருங் கூறுகின்றனர். இம்மழைநீரையே முழுகுதல் அருந்துதல் முதலான எல்லாவற்றிற்கும் ஒருவர் பயன்படுத்தி வருகுவராயின், அவர் பலவகை நோய்களினின்றும் விலகி இனிதாக வாழ்நாட் கழிப்பர். அது நிலத்திலுள்ள பொருள்களொடு கலந்து மாறியபின் அதனைப் பயன்படுத்தலால் அதிற் கரைந்த பொருளின் தன்மைக்கு ஏற்ப நோய் அடைதலையேனும் அன்றி விடுதலையேனும் மக்கள் எல்லாரும் பெறுகின்றனர். ஏனென்றால் நிலத்திலுள்ள பொருள்களிற் பல நோயை விளைவிப்பனவாய் இருக்கின்றன; வேறு பல நோயை நீக்கி நலந்தருவனவாய் இருக்கின்றன. ஆதலால், மழைநீர் நிலத்திற் சேர்வதன் முன்னே அதனைத் துப்புரவான வெள்ளைத் துணி கட்டிப் பிடித்துப் பெரிய மண் சாடிகளில் நிரப்பி வைத்துக் கொண்டு. அவற்றினுள்ளே தூசி செல்லாமல் அழுத்தமாக மூடி, அச் சாடிகளின் கீழேயமைந்த சிறிய நீர்த்தூம்பின் வழியாக அந்நீரை வருவித்துப் புழங்கி வரல் வேண்டும்.

இவ்வாறு மழைநீரைப் பிடித்துப் புழங்குவது மிக வருத்தமான முயற்சி அன்றேனும், மக்கள் தமக்குள்ள சோம்பலாற் கிணறு குளம் முதலியவற்றிலுள்ள நீரையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/223&oldid=1576049" இலிருந்து மீள்விக்கப்பட்டது