பக்கம்:மறைமலையம் 1.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
191

எளிதாக எடுத்துப் புழங்கப் பழகி விட்டனர். இனி அவர்கள் அப்பழக்கத்தை விட்டுப் புதிதாக மழைநீரைப் பிடித்துப் புழங்க இசையார்கள். ஒருவர் ஒன்றிலே பழகிவிட்டாற் பிறகு அஃது எவ்வளவு தீமையுடைய தாயினும் அதனை விடுதற்கு அவர் மனம் இசையார்; அத்தீய பழக்கத்தை விடும்படியாகவும் புதியதொரு நற்பழக்கத்தை கைப்பற்றும்படியாகவுந் தெரிந்தவர் எவரேனும் அவர்க்கு எடுத்துரைப்பராயின் அவ்வறிவினரை அவர் ஏளனமுஞ் செய்குவர்! தீய பழக்கத்தின் கைப்பிடி அத்துணை வலிவுடையதாயிருக்கின்றது! அங்ஙனமாயின், மழை நீரையே எல்லாவற்றிற்கும் பயன்படுத்தி வரல் வேண்டுமென்று சொல்லுதலாற் பெறுவது என்னையெனின்; நல்லறிவு நற்பழக்கங்களை மக்களிற் பெரும்பாலார் ஏற்றுக் கொள்ளாமை இயற்கையாகலின் இதுவும் இதுபோன்ற பிறவும் அவரை நோக்கிக் கூறியதன்று, நூறாயிரவரில் ஒருவர் கோடி பேரில் ஒருவர் இதுபோன்ற புதிய நற்பழக்கங்களிற் பழகப் பெரிதும் முயற்சி வாய்ந்தவராயிருப்பராகலின் அன்னவர்க்குப் பயன்படுமென்று கருதியே இன்னோரன்னவை இங்கெடுத்து எழுதப்படுவவாயினவென்க. எனவே, மழைநீரையே முற்றும் பயன்படுத்திக் கொள்ளல் எல்லார்க்கும் இசையாதாயினும், இசைந்தவர் அதனையே புழங்கித் தூயவுடம்பொடு நீண்டநாள் உயிர்வாழ்ந்து இம்மை மறுமையின்பங்களைப் பெறக்கடவராக. முயல் முதலான சிறிய விலங்கினங்கள் புல்லினும் மரஞ்செடி கொடிகளின் இலைகளிலுந் தங்கிய பனித்திவலைகளை நக்கி நோயின்றி நெடுநாள் உயிர் வாழ்கின்றன. இப் பனித்திவலை களும் மழைநீரைப் போல் வானில் உலவும் நீராவியின் மாறுதலால் உண்டாகும் மிகத் தூய தண்ணீரேயாகும்.

இனி மழைநீருக்கு அடுத்தபடியிலே தூயதாகவுள்ள நீர், இடையறாது ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றுநீரே யாகும். காவிரி, பொருநை, தென்பெண்ணை முதலான யாற்றுநீர் முழுகுதற்கும் அருந்துதற்குந் தகுதியுடையனவாகும். என்றாலும், நகரங்களுக்கு மிகவும் அருகிலுள்ள இடங்களில் இவ்வியாற்று நீர் மலினம் அடைந்து போவதால் அவ்விடங்களிலிருந்து மாசுபட்டவரும் அந்நீர் பலவகை நோய்களை விளைவித்தற்கு ஏதுவாயிருக்கின்றது. யாறுகளின் அருகிலுள்ள ஊரார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/224&oldid=1597647" இலிருந்து மீள்விக்கப்பட்டது