பக்கம்:மறைமலையம் 1.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
192

❖ மறைமலையம் 1 ❖

பலவகையாலும் அவ்வியாற்று நீரை மலினப்படுத்தி விடுகின்றனர். மக்கள் கழிக்கும் மலஞ் சிறுநீர்களிலும் உடம்பழுக்கிலுஞ் சாக்கடை நீரிலும் நோய்களைத் தோற்றுவிக்கும் நச்சுப் புழுக்கள் எண்ணிறந்தனவாய் இருத்தலானும். அவ்வழுக்குகளொடு கலக்கும் யாற்று நீரிலும் அவ்வழுக்கின் நச்சுப் புழுக்கள் சேர்ந்து பல்கு தலானும் அந்நீரில் முழுகு வோர்க்கும் அதனைப் பருகுவோர்க்குங் குளிர் காய்ச்சல் நச்சுக் காய்ச்சல், கக்கற் கழிச்சல் அம்மை முதலான கொடிய நோய்கள் வருகின்றன. இமய மலையிலிருந்து வருங்கால் மிகவுந் தூயதான நீரொடு கூடி ஓடுங் கங்கையானது அரத்து வாரத் தண்டை வரும் போது, அவ்வூர் அவ் வியாற்றங்கரையி லிருத்தலானும், அவ்வூரார் கழித்துவிடுஞ் சாக்கடைத் தண்ணீரும் மற்ற அழுக்குகளும் அதிற் கலத்தலானும், எண்ணிறந்த மாந்தர்கள் அதில் ஓயாமல் முழுகுதலானும் மலினப்பட்டுப் போகின்றது.

பின்னர் அது காசியண்டை வரும்போது அந்நகரமும் அவ் வியாற்றங்கரையிலிருத்தலானும், அந் நகரத்திலுள்ளார் கழிக்கும் அழுக்குகளுஞ் சாக்கடை நீரும் அதிற் கலத்தலானும் புனிதமான அக் கங்கையின் நீர் பின்னும் அழுக்குப்பட்டுச் செல்கின்றது; அதனொடு, கங்கை நீரில் எறிந்தால் மேலுலகங் கிடைக்குமென்னும் ஓர் அறியா நம்பிக்கையால் அங்குள்ளார் பலரும் இறந்துபோன பிணங்களை அதில் இழுத்து விடுதலாலும் அப்புனித நீர் மேலுமேலும் அழுக்கடைந்து நஞ்சாய்ப் போகின்றது; ஆகவே, அக் கங்கைநீரிற் படிந்து அதனைப் பருகும் எண்ணிறந்த மாந்தர்களிற் பலர் குளிர் காய்ச்சல் கக்கற்கழிச்சல் முதலான கொடுநோய்களாற் பற்றப்பட்டு உயிரிழக்கின்றனர்! அந்தோ! கங்கைநீரிற் றோய்ந்து நல்வினையைத் தேடப் போய்த் தமது உயிரையே இழந்து விடுதல் எவ்வளவு இரங்கத் தக்கதாயிருக்கின்றது! கங்கை நீரிற் படிவது நல்வினையேயென்றாலும். அஃது அருகிலுள்ள நகரத்தார் கழிக்கும் மலஞ் சிறுநீர்களினாலுஞ் சாக்கடைத் தண்ணீரினாலும் மலினம் அடைந்து நஞ்சாய்ப் போதலின் அதிற் றலைமுழுகுதலும் அதனைப் பருகுதலும் உடம்புக்கு இசையுமோ? இவ்வுழுக்குகள் கலவாமல் அதன் நீர் தூயதாய் இருக்கும் இடங்களில் அதனைப் பயன்படுத்தலே உடம்புக்கும் உயிருக்கும் நலமாகும் என்றறிதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/225&oldid=1576058" இலிருந்து மீள்விக்கப்பட்டது