❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
வேண்டும். இங்ஙனமே காவிரி பொருநை முதலிய யாறுகளிலுள்ள தண்ணீரும் அருகிலுள்ள நாடு நகரங்களின் அழுக்குகளொடு கலப்பதனால், அவ்விடங்களில் அவற்றின் நீரைச் சிறிதும் பயன்படுத்தல் ஆகாது. இது நிற்க.
இனி, யாற்றுக்கு அடுத்தபடியில் தூய தான நீர் உள்ள நீர்நிலை ஏரிகளும் பெரிய குளங்களுமாகும். பெரிய ஏரிகளிலும் பெரிய குளங்களிலும் நீர் மிகுதியாய் இருத்தலினாலும். அவற்றில் நிறைந்துலவும் மீன்களால் அவற்றின்கண் உள்ள பூச்சிகள் புழுக்கள் தின்னப்படுதலாலும் அவற்றின் நீர் பெரும்பாலுந் தூயதாகவேயிருக்கும். ஆயினும், அவற்றின் அருகாமையிலுள்ள ஊர்களின் அழுக்குகள் அவற்றில் வந்து கலவாமல் இருக்கின்றனவாவென்று தெரிந்து கொள்ளல் வேண்டும். வெயிற்காலத்தில் பெரும்பான்மையும் ஏரி குளங்களிலுள்ள நீர்வற்றிக் குறைதலாலும், அப்போது அவற்றிலுள்ள மீன்களை எல்லாம் வலைஞர் கவர்ந்து கொண்டு போய் விடுதலாலும் அக்காலத்திற் கும்பியொடு சேர்ந்து தீநாற்றம் வீசும் அவற்றின் நீரை எடுத்துப் பயன்படுத்தலாகாது. வெயிற் காலத்தில் தண்ணீர் கிடைப்பது அரிதாகையால் ஏரிகள் குளங்கள் மடுக்கள் முதலியவற்றைத் தூயவாக வைத்துக் கொள்ள வேண்டுவது நல்லறிவுடைய மக்களுக்கு இன்றியமையாத கடமையாம். இக்கடமையின் வழுவி யாடுமாடுகளை அவற்றிற் கொண்டு போய் விடுத்துக் கழுவுதலும் அழுக்குத் துணிகளைத் துவைத்தலும், எண்ணெய் அரைப்புச் சேர்த்து முழுகுதலுஞ் செய்பவர் அவற்றின் நீரை அங்ஙனங் கெடுத்து விடுவதனால் வருந் தீய பயனை உடனே அடைகின்றனர். நஞ்சாய்ப் போன அந்நீரையே அவர்கள் பலவகையாலுந் தமக்குப் பயன்படுத்திக் கொள்ள நேருதலால், அம்மை வயிற்றுளைச்சல் கக்கற்கழிச்சல் காய்ச்சல் முதலான பலவகைநோய்களை அடைந்து அவர் உயிர் துறக்கின்றனர். பின்னே வருவதை முன்னே அறிந்து தமது ஊரின் பக்கத்திலுள்ள ஏரி குளங்களைத் துப்புரவாக வைத்துக் கொள்வராயின், நீர்சுருங்கும் வேனிற்காலத்தில் அவர் எவ்வளவு நன்றாயிருக்கலாம்! எவ்வளவு நல்ல நிரில் முழுகலாம்! எவ்வளவு நல்லநீரை யருந்தி விடாய் தீர்ந்து நலமாயிருக்கலாம்! இதுகிடக்க.