பக்கம்:மறைமலையம் 1.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
194

❖ மறைமலையம் 1 ❖


இனி, யாறு ஏரி குளங்கள் உள்ள ஊரிலும் அவை யில்லாத ஊரிலுங் கிணறுகளே மிகுதியாயிருக்கின்றன. கிணற்று நீரையே பெருந்திரளான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால், யாறு ஏரி குளங்கள் ஊருக்குச் சிறிது தொலைவில் விலகியிருத்தலாலுந், தண்ணீர் இன்றி வீட்டு வினைகளுள் எதுவும் நடைபெறாமையின் அது வேண்டிய பொழுதெல்லாம் யாறு குளங்களுக்குப்போய் அதனை யெடுத்து வருதல் கூடாமையாலும் வீடுகடோறும் அல்லது தெருக்கடோறும் மக்கள் கிணறெடுத்து வைப்பது வழக்கம். இவ்வாறு நினைத்த போதெல்லாம் புழங்குதற்குக் கிணற்றுநீர் மிகவும் பயன்பட்டு வருதலால். அந்நீரை, எவ்வளவு துப்புரவாக வைத்துக் கொள்ளல் வேண்டு மென்பது நாம் சொல்லாமலே விளங்கற் பாலதாம். என்றாலும், மக்களிற் பெரும்பாலார் சோம்பலும் அருவருப்பான பழக்க வழக்கங்களும் அறியாமையும் உடையராக இருத்தலாற், கிணற்றுநீரைத் துப்புரவாக வைத்துக் கொள்ளத் தெரியாமல் அதனைப் பலவகை யாலுங் கெடுத்துப் புழங்கி, அதனாற் பலவகை நோய்களுக்கும் இரையாகிக், காலம் முதிரா முன்னரே இறந்தொழிகின்றார்கள்.ஆதலாற் கிணற்று நீர் எவ்வாறு தோன்றுகின்ற தென்றும். அதனைத் துப்புரவாக வைத்துக் கொள்ளும் முறை எங்ஙனமென்றும் ஆராய்ந்து தெரிந்து கொள்ளல் வேண்டும். மழை நீரே எல்லா நீர்நிலைகளுக்கும் நிலைக்களனா மென்பது மேலே காட்டப்பட்டமையாற், கிணற்றிற் சுரக்கும் நீரும் மழை நீரே யென்று மீண்டுஞ் சொல்ல வேண்டுவதில்லை. ஆனால் வானிலிருந்து இறங்கிய மழைநீர் கிணற்றில் எங்ஙனம் வருகின்றதெனின் அது நிலத்திற் சுவறிக் கிணற்றின் கீழுஞ் சுற்றுப் புறங்களிலுமிருந்து அதன் அடியிற் சுரந்து நிற்கின்றது, இங்ஙனம் அது நிலத்திற் சுவறிக் கிழ் இறங்குங் கால், நிலத்திலுள்ள பொருள்களொடு பிரிப்பின்றிக் கலந்து பின் கிணற்றில் ஊறுகின்றது; அங்ஙனம் ஊறிய நீரிற் கலந்துள்ள பொருள்கள் நல்லனவாயிருந்தால் அந்தத் தண்ணீரைப் புழங்குதலால் உடம்புக்குப் பழுது வராது: அவை தீயனவா யிருந்தால் உடனே உடம்பிற் பலவகை நோய்கள் கிளைக்கும். கந்தகம் மரவுப்பு முதலியவை கலந்திருக்குந் தண்ணீர் நல்லதென்று செம்மைநூல் வல்லார் கூறுகின்றனர். இத்தகைய நற்பொருள் களொடு கலவாமல் தீப்பொருளொடு கலந்த நீர் கிணறுகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/227&oldid=1576068" இலிருந்து மீள்விக்கப்பட்டது