பக்கம்:மறைமலையம் 1.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
196

❖ மறைமலையம் 1 ❖

களைச் செய்து நகரத்தைச் சீர்திருத்தம் பண்ணினமையால், இப்போது சென்னையிலுள்ள குடிமக்கள் நரம்புச் சிலந்தி. கால்வீக்கம். விதைவிக்கம் முதலிய கொடிய நோய்களினின்றும் விடுதி பெற்றிருக்கின்றார்கள்.

இன்னும், இற்றைக்கு அறுபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் இலந்தன் மாநகரத்திற் கொடுமையான கக்கற்கழிச்சல் நோய் கண்டு ஒரு கிழமையில் ஐந்நூறு பயர் விழுக்காடு ஊரிலுள்ளாரைக் கொள்ளைகொண்டு போகலாயிற்று. இதற்கு ஏது என்னையென்று ஆராய்ந்து பார்த்தபோது. அது பின்வருமாறு விளங்கிற்று: அந்நகரத்திற் பொற் சதுக்கம் என்று பெயர் பெற்ற இடத்தில் நிலத்திலிருந்து நீர் உறிஞ்சு பொறி (இயந்திரம்)[1] ஒன்று இருந்தது. அந்தப் பொறியிலிருந்து வருந்தண்ணீர் தேயிலை நீர் நீர் காய்ச்சியெடுப்பதற்கு மிகவும் ஏற்றதென்று பெயர் வாய்ந்தது. ஏனென்றால். இரண்டரைப்படி கொண்ட தண்ணீரில் ஆறு குன்றிமணி யெடையுள்ள சுண்ணாம்பு சேர்ந்திருக்குமாயின் அந்த நீர் தேயிலையிலுள்ள சில துவர்ப்பான பொருள்கள் கரையா வண்ணந் தடுக்கும். அதனால் தேத்தண்ணீர் மிகவுஞ் சுவை யாயிருக்கும். இத்தகைய தண்ணீர் அப்பொற் சதுக்கத்திலுள்ள நீருறிஞ்சு பொறியில் இயற்கையாகக் கிடைத்தமையால் அஃது அவ் வூரெங்குங் கொண்டாடப்படுவதாயிற்று. இற்றைக்கு அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குமுன் அந்நகரத்திற் கொடிய கக்கற்கழிச்சல் நோய் காணவே அங்குள்ள குடிமக்களிற் பலர் அயலிலுள்ள பற்பல ஊர்களுக்கு ஓடிப் போனார்கள்; அவர்களைப் போலவே அயலூர் ஒன்றிற்கு ஓடிப்போன முதியோள் ஒருத்தி தேயிலைக் குடிநிர் செய்தற்கு மிகவும் ஏற்றதான பொற்சதுக்கத் தண்ணீரில் அவாவுடையளாய்த் தன் ஏவற்காரப் பெண்ணை மூன்று மைல் வழி நாடொறும் போக்கி ஒரு குடந் தண்ணீர் அங்கு நின்றும் வருவித்துக் கொள்வள். அக்கிழவி போயிருந்த அயலூரிலுள்ளார் எவர்க்குங் காணாத கக்கற்கழிச்சல் அக் கிழவிக்கும் அவடன் ஊழியக் காரிகக்குங் கண்டது. உடனே இதனைத் தெரிந்த நலந்தெரிகழகத்தார் பொற் சதுக்கத்திலுள்ள நீருறிஞ்சுபொறியின் தண்ணீரை ஆராய்ந்து பார்க்க, அதிற் கக்கற்கழிச்சல் நோயை உண்டு பண்ணும் நச்சுப் புழுக்கள்

  1. 1
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/229&oldid=1576084" இலிருந்து மீள்விக்கப்பட்டது