பக்கம்:மறைமலையம் 1.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
197

இருத்தல் கண்டனர். பின்னரும் அந் நச்சுப் புழுக்கள் அதில் எவ்வாறு வந்தன என்று அவர் ஆராயவே, அந்நோய் தொற்றி வந்த நோயாளிகள் சிலர் அக் கிணற்றுக்கு அருகாமையில் உள்ள இடங்களிற் மலங்கழித்த குழிகள் இருந்தன வென்றும். அக்குழிகளிற் படிந்த மலநீர் நிலத்திற் சுவறி அடிப்படையிலோடும் நீரோட்டத்திற் கலந்து கிணற்றுநீரிற் சேரலாயிற்றென்றும் அறிந்தனர். அதன்பின் உடனே அக்கிணற்றுநீரை எவரும் பயன்படுத்தாதபடி திட்டம் பண்ணவே. கக்கற் கழிச்சல் அந்நகரத்தைவிட்டு அகன்றது.

இன்னும் இங்ஙனமே ஓர் ஊரிற் பரவிய வரலாற்றினையும் இங்கெடுத் துரைப்பாம். நாட்டுப் புறவழியாய் ஒருகால் ஓர் இளைஞன் வண்டியிற் போனான்; சடுதியில் அவனுக்கு நச்சுக்காய்ச்சல் காணவே. வழிப்பக்கத்திலுள்ள ஒரு சிற்றூரின் கண் ஒரு சாவடியில் விடப்பட்டான். அவ்வூரோ நடுவிலோடிய ஓர் ஓடையினால் இரண்டு கூறாய்ப் பிரிபட்டிருந்தது; அவ்வொவ்வொரு கூற்றினும் ஐந்தாறு வீடுகள்தாம் இருந்தன. சில நாட்களிலெல்லாம் அச்சாவடி இருந்த ஊர்ப்பகுதி யிலுள்ளார் பலர்க்கும் நச்சுக்காய்ச்சல் உண்டாயிற்று. ஆனால், அவ்வோடையின் மற்றப் பக்கத்திலிருந்த அவ்வூரின் மற்றப் பகுதியார் ஒருவர்க்கேனும் அந்நோய் வந்திலது இதற்கு ஏது என்னென்று ஆராய்ந்து பார்த்தவளவில் அது பின்வருமாறு புலப்பட்டது; நச்சுக் காய்ச்சல் கொண்ட அவ்விளைஞன் தங்கிய சாவடியில் ஒரு கிணறு இருந்தது. அவ்வோடையின் இக்கரையிலிருந்தார்க்கும் இக் கிணற்றைத் தவிர வேறொன்று இல்லாமையால் இதன் நீரையே அவரெல்லாம் பயன்படுத்தி வந்தனர். நச்சுக் காய்ச்சல் பற்றிய அவ்விளைஞன் கழித்த மலநீர் இக்கிணற்றினருகே சுவறி அதன் நீரிற் கலந்தமையால். அதனைப் பருகிய அவ்வூர்ப் பகுதியினர் பலர்க்கும் அந்நோய் வந்தது. ஆனால், அப் பகுதியிலிருந்த வீட்டுக்காரர்க்கு மட்டும் அந்நோய் வந்திலது. அஃதேனென்றால் அச்சாவடிக்காரனுக்கும் அவ்வீட்டார்க்கும் சில நாட்களின் முன் சண்டையுண்டானமை பற்றி அவர்கள் அக்கிணற்றின் நீரை எடுப்பதில்லை, அதனால் அவர்க்கும். அவ் வோடையின் அக்கரை யிலிருந்தமையால் அவ்வூர்ப் பகுதியினர் மற்றவர்க்கும் அந்த நோய் கண்டிலது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/230&oldid=1597668" இலிருந்து மீள்விக்கப்பட்டது