பக்கம்:மறைமலையம் 1.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
201

இருத்தற்பொருட்டு உதவி செய்வது நாம் அருந்துந்தண்ணீரேயாகும். ஏனென்றால் நெருப்பொடு மாறுபட்ட இயற்கயுைடையது தண்ணீர் ஒன்றுமேயாதலால். அஃது இரத்தத்திற் கலந்து எங்கும் பரவிப் பாயுங்கால் அங்கெங்கெரியந் தீ தன் எல்லைக்கு மிஞ்சிப் போகாமல் அதனைத் தடுத்து வைக்கின்றது. இதனாலேதான், காய்ச்சல் நோயால் மிக வருந்துபவர்க்கு விடாய் மேலிடுகின்றது; காய்ச்சல் நோய் உடம்பில் உள்ள நெருப்பைத் தன்னளவில் மிகச் செய்தலால், அந்நெருப்பை ஒருநிலைப்படுத்தும் பொருட்டு நீர் வேட்கை தோன்றி அவரைக் குளிர்நீர் பருகும்படி தூண்டுகின்றது; அதற்கிசைந்து அவர் சிறிது சிறிதாகக் குளிர்ந்த நீரை விட்டு விட்டு அருந்துவராயின் காய்ச்சலின் மும்முரந் தணிந்து போகும், காய்ச்சற்காரர் குளிர்ந்த நீர் பருகுதல் ஆகாதென நம்மனோரிற் பலர் கூறுவர். அங்ஙனம் கூறுவது அறியாமையே யாகும், காய்ச்சற்காரர் ஒரே முறையில் ஏராளமான தண்ணீரைக் குடிப்பதுதான் குற்றமாகுமே தவிர, இடைவிட்டு விட்டு, அஃதாவது அரைமணி அல்லது ஒருமணி நேரத்திற்கு ஒருகால் அரைப்பலங் குளிர்ந்த தெளிநீரை மருந்துபோல் அருந்தி வரல் அவர்க்குப் பெரிதும் நன்மை தருவதேயாம். குளிர்ந்த நீர் சிலவற்றில் நச்சுப் புழுக்கள் இருத்தலும் உண்டாகையால், அந்நீரை நன்றாய்க் காய்ச்சி ஆற வைத்துப், பிறகதனைச் சிறுகச் சிறுகக் காய்ச்சற்காரர்க்குக் கொடுத்து வருவதுதான் நலமாகும். இங்ஙனங் குளிர்நீர் கொடுத்துவரவே, அஃது ஆங்காங்கு இரத்தத்திற் கலந்து பரவி அங்கங்குள்ள சூட்டைத் தணியச் செய்யும். மருந்திற் றணியாத மும்முரமான கடுங்காய்ச்சலைத் தணியச் செய்தற்குத் தண்ணீர் அருந்தும் இதுதான் சிறந்த முறை யாகும்

இனி, ஆறு ஏரி குளம் கால்வாய் கிணறு முதலியவற்றிலுள்ள நீர் பெரும்பாலும் அயலிலுள்ள அழுக்குப் பொருள்களோடு கலந்து நஞ்சாயிருப்பதனால். அந்நீரைக் குடிப்பவர்கள், அதனை முறுகச் காய்ச்சிக் குளிரவைத்துக் குடித்தல் வேண்டும். ஏனென்றால் பழுக்கக் காய்ச்சிய நீரிலுள்ள நச்சுப்புழுக்கள் அத்தனையுஞ் சூட்டினால் இறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/234&oldid=1597682" இலிருந்து மீள்விக்கப்பட்டது