❖ மறைமலையம் 1 ❖ |
பொருட்டுந் தீனிப்பையிற் சூடு பிறப்பிக்கும் பொருட்டும் அவர்கள் வெந்நீர் அருந்தல் வேண்டும். அச்சூட்டைத் தணித்தற்குக் குளிர்ந்த நீர் அன்றோ பருகல் வேண்டும், வெந்நீர் பருகல் மேலும் அச்சூட்டை மிகுதிப்படுத்துமே எனின்; அங்ஙனம் அன்று, மனமுயற்சி யுடையவர்களுக்குத் தீனிப்பையிலுள்ள இரத்தம் மேலேறி யோடுதலால் தீனிப்பையிற் சூடு குறைகின்றது; அதிற் சூடு குறையவே அதனை நிறைவு செய்தற்கு அடியிலள்ள சூடு மிகுதிப்படுகின்றது; ஆகவே, மனமுயற்சி யுடையவர்கள் வெந்நீர் அருந்தின மட்டில் தீனிப்பையிற் குறைந்த சூடு தன்னளவுக்கு வருமாதலால், அடிச்சூடு மிகுதிப்பட்டு எழாமல் தானுந் தன் நிலையில் நிற்கும்; அவ்வாறாயின், வெந்நீர் உண்ணாமல் அடியிலிருந்து எழுஞ் சூட்டினாலேயே தீனிப்பையிற் குறைந்த வெப்பத்தை நிறைவு செய்து கொள்ளுதலால் வரும் இழுக்கு என்னையெனின்; அடியினின்று மேல் எழுஞ் சூடு வெறும் வெப்பமேயாதலால், அது மலக்குடலையுந் தீனிப்பையையுந் தீய்த்து விடும்; வெந்நீரோ தன்னிடத்துள்ள சூட்டைத் தீனிப்பைக்குத் தருவதொடு தான் நீராய் இருத்தலால் அது தீயாமற் செய்து இரத்தம் உண்டாதற்கும் உதவி செய்யும், மனமுயற்சியுடையவர்கள் குளிர்ந்த நீர் அருந்துவராயின் அஃது அவர்க்கு நோயை விளைவிக்கும்; யாங்ஙனமெனில், அவர் செய்யும் அறிவு முயற்சியால் அவர்தந் தீனிப்பையில் உள்ள இரத்தம் மேலே மூளைக்குச் செல்கின்றது; அப்பொழுது அவர் குளிந்த நீரைப் பருகினால் அது தீனிப்பையிற் சென்று அங்கே சிறுகவுள்ள மிச்ச இரத்தத்தையும் மூளைக்கு மேலோடச் செய்யும்; அதனால் அவர்க்கு மண்டைக் குத்துந் தடிமனும் உண்டாம்; அவற்றொடு, தீனிப்பையிற் சூடும் இரத்தமும் மிகக் குறைதலால் நன்றாகப் பசியெடாது உண்ட உணவுஞ் செரியாது; அதனால் மலக்கட்டும் அதன் வாயிலாக இன்னும் பல நோய்களும் உண்டாகும். ஆதலால் மனமுயற்சி உடையவர்கள் வெந்நீர் அருந்துதலே நிரம்பவும் நலமுடைத்தாகும் என்று உணர்ந்து கொள்க.
இங்ஙனமாக உடம்புழைப் புள்ளவர்கள் தண்ணீரும் மூளையுழைப் புள்ளவர்கள் வெந்நீரும் அருந்துதலே முறையாயினும், ஒரோவொரு நேரங்களில் அவரவர்க்கு எவ்வெவ்வகை-