பக்கம்:மறைமலையம் 1.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
206

❖ மறைமலையம் 1 ❖

போது உணவூட்டுதல் நிரம்பவும் நோய்க்கு இடமாதல் போல. விடாய் இல்லாத போதும் நீர் அருந்துதல் நோய்க்கு மாமென்பது எவர்க்குந் தெளிவாய் விளங்கற்பாலதே யாம். அங்ஙனமாயின், உடம்பின் முக்காற்பங்கு நீராளமாய் இருத்தலானும், இரத்தத்திற் சேரும் அழுக்கை அவ்வப்போது வெளிப்படுத்த வேண்டியிருத்தலானும், இரத்தத்தில் உள்ள சூடு மிகாமல் ஒத்த நிலையில் நிற்றல் வேண்டுமாகலானும் இவற்றிற்கெல்லாம் இன்றியமையாததான நீரை அடிக்கடி பருகுதல் பின்னை எவ்வாறுதான் கைக் கொள்ளப் படுமெனிற் கூறுவாம். வேண்டப்படாதது அமிழ்தமே யானாலும் அதனை உட்கொண்டால் அது நஞ்சாய் மாறித் துன்பமே தரும்; ஆகையால் உடம்பு வேண்டாதபோது நீர் ஊட்டுவது சிறிதும் ஆகாது; மற்று நீர் இல்லாமலும் உடம்பின் அகக்கருவி புறக்கருவிகளைத் தூய்மைப்படுத்தி வளர்த்தலும் ஆகாது; ஆகவே, இவ்விருவகையிலுந் தீது பிறவாமல் ஒழுகுமாறுதான் யாங்ஙனமெனின்; அஃது உடம்பு அடிக்கடி நீரை விரும்புமாறு செய்வதேயாம். உடம்பினால் உழைக்கத்தக்கவர்கள் மெய்ம்முயற்சியினைச் செய்துவரல் வேண்டும்; மூளையால் உழைக்கக் கூடியவர்கள் மனமுயற்சியினை செய்துவரல் வேண்டும்; இவ்வாறு இவ்விருதிறத்தாரும் உழைத்து வரவே இவர்கள் உடம்பின் உயிராற்றல்கள் குறைந்து கொண்டே வரும்; அக் குறையினை உடனுக்குடன் நிரப்புதற்பொருட்டுப் பசியும் விடாயும் முறைப்படியே நிகழும்; நமதுடம்பின்கண் வன்பொருட் பகுதியினும் மென்பொருட் பகுதியே மிகுந்திருத்தலால், வன்பொருட் குறையினை நிரப்புதற்கு உண்டாகும் பசியினும் மென்பொருட் குறையினை நிறைவு செய்தற்குத் தோன்றும் நீர் வேட்கையே அடுத்தடுத்து நிகழாநிற்கும். மேலும், பசி தீர்த்தற் குண்ணும் உணவும் வன்பொருளாதலால் அது செரித்தற்கு நேரஞ் செல்லுதல் போல, விடாய் தீர்த்தற் குண்ணும் மென்பொருளான நீர் செரித்தற்கு நேரம் மிகச் செல்லாது; அதனாற், பசியினும் நீர்விடாயே அடுத்தடுத்து நிகழாநிற்கின்ற தென ஓர்க. சிறிதுஞ் சோம்பலுற்றுச் சும்மா இராமற் ஒரு தொழின் முயற்சியைச் செய்தலே அடிக்கடி நீர் பருகுதற்கு வழியாமென்பது இதனால் நன்கு புலப்படுதலின், இதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/239&oldid=1576133" இலிருந்து மீள்விக்கப்பட்டது