பக்கம்:மறைமலையம் 1.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
207

விடுத்துச் சும்மா இருப்பவரை அடிக்கடி நீர் அருந்துகவெனக் கற்பித்தல் பொருந்தா தென்பதும் இது கொண்டு உணரப்படும், பசி விடாய் தீர்த்தற்கும் அவற்றின் வாயிலாகத் திருத்தமான உணவும் நீரும் அருந்தி உடம்பினை நெடுங்காலம் நலம்பெற வைத்தற்கும் இன்றியமையாதவை உடம்பு முயற்சியும் மன முயற்சியுமே யாகலான் அவற்றைச் சோம்பலின்றிச் செய்தற்கு எத்திறத்த வருங் கிளர்ச்சி உடையராயிருக்க வேண்டும், இவ்வாற்றால் அடுத்தடுத்து முயற்சி செய்து வருபவர் அடுத்தடுத்துத் தண்ணீர் பருகி வரல் வேண்டுமென்பதும் யாஞ் சொல்லாமலே விளங்கும்.

இனி, விடாய் உண்டாகும்படி செய்வித்துக் கொண்டு அடுத்தடுத்து நீர் பருகுதல் இன்றியமையாத தாயினும், உணவெடுக்குங் காலத்தில் இடையிடையே நீர் அருந்துதல் ஒரு சிறிதுங் கூடாது. மக்களிற் பெரும்பாலார் ஒவ்வொரு வாய் கொண்ட உணவை விழுங்குங்காலும் நீரையும் உடன் சேர்த்துப் பருகுகின்றார்கள். உள்ளுள்ள தீனிப்பையின் அமைப்பையும் அதில் நடைபெறுந் தொழிலையுந் தெரிந்து கொள்ளாமையால் அவர்கள் தம் மனம் போனபடி உணவுண்ணுங்காலும் யிடையே நீரைக் குடித்து நோயை வருவித்துக் கொள்கின்றார்கள், வாயிற்பெய்த உணவை வாயிலுள்ள உமிழ்நீர் செவ்வையாகக் குழைத்துப் பதப்படுத்தித் தீனிப்பையினுள் இறக்குகின்றது, அஃது அங்கே சென்ற அளவில் தீனிப்பையிற் சுரக்கும் மற்றொரு வகை நீரொடு கலந்து செரித்துப் போகின்றது, இரைப்பையிற் சுரக்கும் இந் நீரின்கண் உண்ட உணவைச் செரிக்கப் பண்ணுங் கருப் பொருள்கள் அமைந்திருக்கின்றன.

இது தன்னியற்கையிற் பிசுபிசுப்பு உடையதாகையால், தன்னிலைமை குலையாதிருக்கும் வரையில் உணவைச் செரிக்கச் செய்வதான தனது செயலைக் குறைவறச் செய்யும். வாய்நீரும் இவ்விரைப்பை நீரும் உணவிற் கலந்து நின்று அதனைச் செரிக்கச் செய்யுங் கருவிகளாக இறைவனால் அமைக்கப்பட்டிருக்கின்றன, இவ் விருவகை நீரும் ஒப்பக் கலவாமல் ஒன்று குறைந் தாலும், அல்லதவை யிரண்டுங் குடிக்கும் நீரின் சேர்க்கையால் மிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/240&oldid=1597702" இலிருந்து மீள்விக்கப்பட்டது