பக்கம்:மறைமலையம் 1.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
208

❖ மறைமலையம் 1 ❖

நீர்த்துப் போனாலும் உணவு செரிமானமில்லாமற் போம், ஒரு வாய்கொண்ட வுணவை நன்றாக மெல்லாமல் விழுங்குவதால் வாயிலுள்ள நீர் வேண்டுமளவுக்கு அவ்வுணவிற் கலவாமற் போதலோடு, அவ்வுணவும் வாயினுள் நன்றாய் அரைக்கப்படாமல் இரைப்பையினுட் செல்கின்றது. வாய் நீரில் நன்றாய்க் கலவாமலுஞ் செவ்வையாய் அரைக்கப்படாமலும் விழுங்கப்பட்ட அவ்வுணவு இரைப்பைக்கு மிகுந்த வேலையைத் தருவதேயாகும்; வாய் செய்ய வேண்டிய வேலையையுந் தானே செய்வதால் அதற்கு இரட்டித்த வேலை உண்டாவதொடு அதனிடத்துச் சுரக்கும் நீரும் அவ்வுணவைச் செரிக்கச் செய்தற்குப் போதா அளவினதாய்க் குறைந்து போகின்றது; அதனால் உணவு செரியாமல் அழுகி நஞ்சாகிப் பலவகை நோய்களை வருவிக்கின்றது. இனி, உண்ணும்போது இடையிடையே நீரருந்துவதும் இங்ஙனமே தீமை பயப்பதொன்றாம். குடிக்கும் நீர் கலந்தவுடன் வாய்நீர் நீர்த்துத் தன்றன்மை கெடுவதோடு, இரப்பை நீரும் அங்ஙனமே நீராகிப் பதனழிந்து போகின்றது, அதனால் உண்டவுணவு சிறிதுஞ் செரிப்பதில்லை, மெல்லிய இயல்புள்ள தீனிப்பையின் தோலுந் தன் அளவிற்கு மேல் அரைக்குந் தொழிலைச் செய்தலாற் புண்பட்டு நோயை உண்டாக்கா நிற்கும். ஆகவே வாய்கொண்ட வுணவை மெல்லாமல் விழுங்குவதும் உண்ணும்போது இடையிடையே நீர் பருகுவதும் எவ்வளவு தீமைக்கு இடமாகும் என்பதை இதனைப் படிப்போர் செவ்வையாய்க் கருதிப் பார்க்க வேண்டும்.

இங்ஙனமாயின், உண்ணும்போது இடையிடையே உண்டாகும் நீர்விடாயைத் தணித்துக் கொள்ளும் வகைதான் யாதெனின்; வாயிலிட்ட உணவைச் செவ்வையாக மெல்லுதலே நீர்விடாய் தோன்றாமற் செய்து கொள்ளுதற்கு வழியாம், குழம்பாகுந்தனையும் உணவைப் பலகாலும் மெல்ல மெல்ல வாய்நீர் உணவில் நன்றாய்க் கலந்து கீழ் இறங்கும்; அப்போது நீர்விடாய் உண்டாகாது. மெல்லாமல் விழுங்கும் உணவில் வாய்நீர் வேண்டும் அளவுக்குக் கலப்பதில்லாமையால், அஃது இரைப்பைக்குச் சென்ற மட்டாலே அக் குறைபட்ட நீரைப் பெறும்பொருட்டு விடாயை உண்டாக்குகின்றது; அவ் விடாயைத் தணிப்பதற்கு நிர் அருந்தினால் இரைப்பை நீரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/241&oldid=1576144" இலிருந்து மீள்விக்கப்பட்டது