❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
நீர்த்துப் போக உணவு செரியாமல் நோயை விளைவிக்கின்றது ஆதலால், உண்ணும் போது விடாய் உண்டாகாமைப் பொருட்டும், உணவு செவ்வையாய்ச் செரித்தற் பொருட்டும் நன்றாய் மென்று உண்ணப் பழகிக் கொள்ளுதல் உடம்பைப் பாதுகாக்க வேண்டுவார்க்கு இன்றியமையாத கடமையாம்.
இவ்வாறன்றி ‘யான் ஐந்து நொடியிற் சாப்பிட வல்லேன், யான் இமைகொட்டுதற்குட் சாப்பிடமாட்டுவேன்’ என்று பேதமையைால் வீண்பெருமை பேசிக் கொண்டு உணவை நன்கு மெல்லாமல் விரைய விழுங்கி, நம் இறைவன் கொடுத்த வுடம்பைப் பழுதாக்குவது சிறிதும் நன்றாகாது. ஆற அமர இருந்து தின்பதனை நன்றாய் மென்று சுவை பார்த்து மென்பதமாக்கி வாய்நீரிற் குழைத்து இறக்கி இன்புறுக, அல்லும் பகலும் இடைவிடாது உழைப்பதும், பிறரிட்ட ஊழியம் புரிவதும், வேறுபல முயற்சிகள் செய்வதும் எல்லாந் தக்க உணவு தேடி உடம்பைப் பாதுகாத்தற்கும். அவ்வுடம்பினுதவியால் அறிவை விளங்கச் செய்து அறியாமையைத் தொலைத்து ஐயன்றிருவடிக்கு ஆளாகுதற்கும் அல்லவோ? ஆதலால் உணவின் முற் சென்றால், விரையாமல் அமைதியோடிருந்து மெல்ல அருந்தி வருக, இங்ஙனம் அமைதியோடிருந்து நன்றாய்ச் சுவை பார்த்து உண்பவர்களுக்கு அளவுக்கு மிஞ்சியுண்ண இடம் உண்டாகாது; கை பாதி வாய் பாதியாய்ப் பரபரப்பொடு தின்பவர்களுக்கே அளவின்னதென்று தெரியாமற் பேரளவான உண்டியைப் பரபரப்பொடு விழுங்கி மூச்சுவிட ஏலாமல் மயங்கி வீழ்தல் நேரும். செவ்வையாய் உண்பவர்களுக்கு உண்டி சிறிதாதலோடு, அது நன்றாய்ச் செரித்து உடம்பினைப் பேணி வளர்த்தற்கிசைந்த வலிய பொருளாயும் முழுதும் மாறும். பேரளவான உண்டியை உண்பவர்களுக்கே வலிமை மிகுதியும் உண்டாம் என நினைத்தல் பழுதுடைத்தாம். உண்டி பெரிதாயினுஞ் சிறிதாயினும் உண்டதத்தனையும் இரத்தமாய் மாறி உடம்பிற் சேரப் பெற்றவர்களுக்கே வலிமை நிரம்பவும் உண்டா மென்றலே பொருத்தம் உடைத்தாமென்க. இத்துணை யுங் கூறிய வாற்றால். உணவெடுக்குங்கால் நீர் பருகாமையின் ஏதுவும், உணவு அருந்தும் முறையும் செவ்வனே விளங்கா நிற்கும்.