❖ மறைமலையம் 1 ❖ |
அவ்வாறாயிற், பின் நீர் பருகுவதுதான் எப்போ தெனின்; உணவெடுப்பதற்கு ஒன்றரை யல்லது இரண்டு நாழிகைக்கு முன்னும். உணவு கழிந்து ஒன்றரை யல்லது இரண்டு நாழிகைக்குப் பின்னும் நீர் குடித்தலே நலமுடைத்தாம். ஆயினும் உண்டு முடிந்து எழுதற்கு முன் வெந்நீர் சிறிது அருந்துதல் குற்றமாகாது நன்மை பயப்பதேயாம். உணவு முடிந்தபிற் பாலேனுந் தீவிய நீரேனும் பருகுவோர்க்குச் சிறிதும் வெந்நீர் அருந்துதல் வேண்டா. உணவெடுப்பதற்கு இரண்டு நாழிகை முன் வெந்நீர் குடித்தால் அஃது இரைப்பையைத் துப்புரவாக்கி அதிலுள்ள அழுக்குகளையும் நச்சுக் காற்றுகளையும் அப்புறப்படுத்திப் பசித்தீயை மிகுதியாக்கும். உணவு முடிந்து இரண்டு நாழிகைக்குப் பின் வெந்நீர் குடித்தால். இதற்கிடையில் இரைப்பையிலிருந்த நீர் சிறுநீர்ப்பைக்குப் பிரிந்து போனமையால் இரைப்பை நீரின்றி வறண்ட வறட்சியை அகற்றி அதனை அது செவ்வையாய் நடைபெறும்படி உதவி செய்யும்; அதுவேயுமன்றி இரைப்பையிற் செரித்துப் போனபின் தங்கியிருக்கும் மலச்சக்கை அங்குள்ள சூட்டால் தீய்ந்து போகாமல் அதனை அஃது இளகிய நிலையில் வைத்து மலக்குடலுக்கும் எளிதிற் போகச் செய்யும்; நமதுடம்பில் முக்காற் பங்கு நிறைந்திருக்கும் இரத்தங் குறைபடாமல் வைத்து. அதிற் சேரும் அழுக்குகளையும் அஃது உடனுக்குடன் வெளியாக்கித் தூய்மை செய்யும். இங்ஙனம் முறைதெரிந்து நீர் அருந்தி வருபவர்களுக்கு மல இறுக்கம் என்னும் பொல்லாத நோய் வருவதில்லை; அடிச்சூடுஞ், சொரி சிரங்குங், கண்ணெரிச்சலும் உண்டாவதில்லை. அவர்களுடைய இரத்தம் எப்போதுந் தூய தாயிருத்தலால். அவர்களுடம்பு ஒளியுடைதாயும் அழகாயும் இருக்கும்.
இனி, நீர் அருந்துங்காற் கைக்கொள்ள வேண்டிய சில முறைகளும் அறியத்தக்கனவாம். வெந்நீரேனுந் தண்ணீரேனும் அருந்தும்போது பலர் ஒருபடி நீரை அண்ணாந்த படியே கடகடவென்று ஒரே மூச்சாய்க் குடித்துவிடு கின்றார்கள். இவ்வாறு குடிப்பது செரியாத் தன்மையை விளைவிப்பதொடு. மார்படைப்பு காதடைப்பு முதலான நோய்களையும் நீர்வீக்கத்தையும் உண்டு பண்ணும். ஒரு முறையில் அறைக் கிண்ணந் தண்ணீர்க்குமேற் பருகுதல் ஆகாது; அதனைப்