பக்கம்:மறைமலையம் 1.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
212

❖ மறைமலையம் 1 ❖

நாம் உணவு கொள்வது கூடாது; பிறர் உணவெடுக்கும்போது அவரை நாம் பார்த்தலுமாகாது. ஒவ்வொருகால் விருந்தாகப் பலரோடிருந்து சாப்பிட நேர்ந்தால். அடுத்திருப்பவர்களை உற்றுப் பாராமல். நேர்த்தியாகவுந் திருத்தமாகவும் இருந்து அமைதியொடு விரல் நுனிகளாற் சிறிது சிறிதாகச் சோறு கறி முதலான தின்பண்டங்களை யெடுத்து வாயை விரியத் திறவாமல் சிறுகத் திறந்து அழகாகமென்று தின்னல் வேண்டும். இலையிலேனும் பரிகலங்களிலேனும் இட்ட சோறு கறி குழம்புகளை ஒன்றாகச் சேர்த்து விரலெல்லாம் நுழைத்து அளைந்து பெரு மொத்தைகளாக உருட்டி யெடுத்து வாயை அகலத்திறந்து மூச்சவிடாமற் பரபரப்பொடு உண்பது பெரிதும் அருவருக்கற் பால தொன்றாம். ஆதலால் தனித்த தனித்தனியே உண்ணவேண்டிய பல்வகைக் கறிகளையுஞ் சேர்த்துண்ண வேண்டிய சோறு குழம்புகளையும் நாகரிகத்தொடு சிறுகச் சிறுக எடுத்து நேர்த்தியாக அருந்துதல் வேண்டும். இவ்வாறுண்ணும் போது இடதுகையை மடித்து மடியின் மேல் அடக்கமாக வைத்துக் கொள்ளல் வேண்டுமே யல்லாமல். தொடையின் மேலேனும் நிலத்திலேனும் ஊன்றலாகாது. நீரருந்துங்காற் பலர் முன்னிலையில் ஏனத்தை வாயில் வைத்து அருந்துதல் ஆகாமையால். அண்ணாந்து நீரை வாயில் ஏற்றுப்பின் நிமிர்ந்து மெல்ல உள்ளிறக்கல் வேண்டும். இன்னும் இவை போன்ற நாகரிக முறைகளையெல்லாம் ஒவ்வொருவருந் தமது நுண்ணுணர்வால் ஆராய்ந்து பார்த்து அவற்றின்படி நடந்துவருவது அழகையுங் கவர்ச்சியையும் அவர்கட்கு உண்டுபண்ணும் என்க.

அடிக்குறிப்புகள்

1. உயிர்த்துகள் - Cell Protoplasm

2. For Instancei Dr. H. A. prkyni M.D.i in the stimulating work auto - Suggestion.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/245&oldid=1576161" இலிருந்து மீள்விக்கப்பட்டது