❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
பருகுகையில் அண்ணாவாமல் எப்போதும் போலவே நேராயிருந்து சிறிது சிறிதாக உரிஞ்சி வாய் நீரொடு கலந்து சுவை பார்த்துக் குடித்தல் வேண்டும். இங்ஙனம் அருந்தும் நீர் தீனிப்பையிற் சென்று நன்றாய்ச் செரித்து இரத்தமாய் மாறுமாதலால், அஃதுடம்பிற்கு அளவிறந்த நன்மையைத் தரும். தண்ணீர்க் கிண்ணத்தை வாயில் வைத்தருந்தல் நாகரிக முறைக்குக் குறைவாய் நினைக்கப்படுதலாலும். ஓர் ஏனத்தைப் பலரும் வாயில் வைத்துக் குடித்தலால் தொற்றுநோய்கள் வருதற்கு இடமுண்டாதலாலும் நீர் பருகுதற்குப் புழங்கும் ஏனங்கள் கண்ணாடிக்கிண்ணங்கள் குவலைகாளகவே இருத்தல் நன்று. கண்ணாடி ஏனங்கள் மிகவுந் தூயனவாதலால் அவற்றை உடனுடக்குடன் கழுவி வாயில் வைத்தருந்துவது குற்றமாகாது. இங்ஙனமே வெள்ளிக்கலங்கள் பொற்கலங்களும் நிரம்பத் தூயனவாயிருத்தலால் அவைகளும் வாயில் வைத்தருந்துதற்கு ஏற்றனவாகும். இனிப் பிறர் இல்லங்களுக்கு விருந்தாய்ச் செல்பவர் அவர் தரும் ஏனங்களை வாயில் வைத்தருந்துவதும். வேறு வகையில் அவற்றை எச்சிலாக்குவதும் நன்முறை அன்றாதலால் அவற்றிலுள்ள நீரை அண்ணாந்த நிலையிலிருந்து ஏனம் வாயிற்படாமல் வாயில் வாங்கிக் கொண்டு பிறகு தலையை நிமிர்த்து அந்த நீரைச் சிறிது சிறிதாக உள்ளிறக்குதல் வேண்டும். உணவுப் பண்டங்களையும் எச்சிலாக்காமற் கையாலெடுத்துத் தூக்கி வாயுட் பெய்தல் வேண்டும்.
உணவெடுக்கும்போதும் நீர் அருந்தும்போதும் முதன்மையாக நினைவிற் பதிக்க வேண்டுவது மற்றொன்று உண்டு; அது திருத்தமான நாகரிக முறையை விரும்புவார்க்கு இன்றியமையாததொன்றாம். உணவு அருந்துதலும் நீர் பருகுதலும் பார்ப்பவர்க்கு அருவருப்பினை விளைக்குந் தொழில்களாகும். ஒருவர் உண்ணும் போதாவது குடிக்கும் போதாவது கிட்ட இருந்து அவரைப் பார்த்தால் நமக்கு அருவருப்பு உண்டாகும். அப்படியே உண்ணும்போதுங் குடிக்கும் போதும் பிறர் நம்மைப் பார்த்தால் அவர்க்கும் நம் மேல் அருவருப்பு உண்டாகுமென்று அறிந்து கொள்ளல் வேண்டும். ஆகையால், அவ்வருவருப்புக்கு இடமில்லாதபடி நாம் செய்து கொள்ள வேண்டுவது நாகரிக முறைக்கு இன்றியமையாத தாகும். பிறர் பார்க்கும்படியிருந்து