பக்கம்:மறைமலையம் 1.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
215

அடிக்கடி கழுவித் தூய்தாக்கல் உடம்பைப் பேணுதற்கு இன்றியமையாததா மென்பது பெறப்படுகின்ற தன்றோ?

இனி, நீராடவேண்டிய அளவுங் காலமும் யாவை என்றால், அவை அவரவர் உடம்பின் நிலைமையறிந்து செயற்பாலனவாகும். நல்ல உரமான உடம்புடையவர்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று முறை குளித்து முழுகினாலும் அவர்க்குத் தீங்குண்டாகாது; மெல்லிய உடம்புடையவர்கள் ஒரு கிழமையில் இரண்டு மூன்று முறைக்குமேல் நீராடினாலுந் தீங்குண்டாகும். மிகவும் நடமாடி நன்றாய் உழைக்கும் வலிய உடம்புள்ளவர்கள் அடுத்தடுத்து முழுகுதல் அவர்க்கு நலந்தருவதேயாகும். ஆனால், அவர்களைப்போலவே மற்றவர்கள் எல்லாருஞ் செய்தலாகாது. எந்நேரமும் இருப்பிலிருந்து வேலை செய்பவர்களும் அறிவுமுயற்சியுடைவர்களும் ஒன்றைவிட்டொரு நாள். அல்லது இரண்டு நாளைக்கு ஒருகால். அல்லது ஒரு கிழமைக்கு இரண்டுமுறை தலைமுழுகுதல்தான் நலம் உடைத்து. நன்றாய் உழைப்பவர்களுக்கு வியர்வை மிகுதியாய் வெளிப்படுதலால், அங்ஙனந் தமது உடம்பிற் சேரும் வியர்வை அழுக்கை அவர்கள் அடிக்ககடி கழுவி விடுதல் வேண்டும். இருப்பிலுள்ளவர்களுக்கும் அறிவு முயற்சியுடையவர்களுக்கும் அத்துணை அழுக்கு வெளிப்படாமையால் அவர்கள் மற்றவர்களைப் போல் அடுத்தடுத்து நீராடுதல் வேண்டப்படுவதில்லை. மேலும், நமதுடம்பின் மேற்றோலிலுள்ள புழைகளின் வழியே ஒருவகையான எண்ணெய் கசிந்து கொண்டேயிருக்கின்றது; வெண்ணெயானது தோல்வறண்டு போகாமல் அதனைப் பதப்படுத்தி வழுவழுப்பாக்கும் பொருட்டு அங்ஙனங் கசிந்து கொண்டிருக்கின்றது. மிக்க உழைப்புள்ளவர்கள் அடுத்தடுத்து முழுகினாலும், அவர்கள் உடம்பின் உறுப்புகள் எந்நேரமும் அசைவதனால், அவர்களுடம்பில் அவ்வெண்ணெய் மேலும் மேலுங் கசிந்து கொண்டேயிருக்கும். இருப்பிலுள்ளவர்கட்கு அவ்வாறு உறுப்புகள் அசைவதில்லாமையால், அவர்கள் அடுத்தடுத்து முழுகவே அவ்வெண்ணெய் முற்றுங் கழுவப்பட்டுப் போகும்; அதனால். அவர்களுடம்பின் மேற்றோல் மென்பதப்பட்டு வழுவழுப்பாய் இராமல் வறண்டு சாம்பற் பூத்துப் போதலொடு தோலைப் பற்றிய நோய்களையும் வருவிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/248&oldid=1597729" இலிருந்து மீள்விக்கப்பட்டது