❖ மறைமலையம் 1 ❖ |
ஆதலால். இருப்பிலுள்ளவர்களும் அறிவுமுயற்சியுடையவர்களும் இந்த வகையை உணர்ந்து, தமதுடம்பின் நிலைக்குத் தக்கபடி குளித்தும் முழுகியும் வரல் வேண்டுமென்க.
இனிக், கதிரவன் கீழ்ப்பால் எழும் அழகிய விடியற்காலத்தே நீராடுதல் பெரிதும் விரும்பத்தக்கதுஞ் சிறந்ததும் ஆகும். இராக்காலம் முற்றும் மரங்கள், மரப்பொந்துகள், கூடுகளில் அடைந்திருந்த பல்வகைப் பறவைகளும் ஏரி குளங் கால்வாய்களிலும், வாழைத் தோட்டந் தென்னந் தோட்டங்களில் நீர் பாயுங்கால்களிலும் படிந்து இறக்கைகளால் நீரைச் சிலுப்பிக் குளித்து முழுகுதலைப் பாராதவர் எவர்? ஆடு மாடு எருமை மான் முதலான விலங்கினங்களும் அப்போது மந்தை மந்தையாய்ச் சென்று ஆறு ஏரி குளம் முதலான நீர் நிலைகளில் எவ்வளவு உளக் களிப்போடு முழுகி மகிழ்கின்றன!இரவெல்லாம் பகலவனைக் காணாது சோம்பிக்கிடந்த மரஞ் செடி கொடிகளெல்லாம் அவன் மலரொளியைக் காணும் அப்போது எவ்வளவு செழிப்பாய்ச் பச்சைப்பசேலென்று இளங்காற்றில் அசைந்து நிற்கின்றன! இவ்வாறு எல்லா உயிர்ப்பொருள்களும் உள்ளக் கிளர்ச்சியொடு நீரை அவாவி நிற்கும் விடியற்காலப்பொழுதே நீராடுகற்கு மிகவும் ஏற்றதாகுமென் றுணர்ந்து கொள்ளல் வேண்டும். விடியற்காலையில் முழுகுதற்குரிய இசைவு இல்லாதவர்கள் காலையிற் பத்து நாழிகைக்குள் முழுகுதல் நன்று! அதற்கும் இசைவு இல்லாதவர்கள் உச்சிக்காலத்தில் உணவெடுப்பதற்கு முன் நீராடுதல் குற்றம் அன்று. பகலவன் சாய்ந்துபோகும் பிற்பகலிலே தலைமுழுகுதல் அத்துணைச் சிறந்ததன்று. இனிப், பகலவன் மறைந்துபோன இருட்காலத்தே நீரிற்படிதல் பெரிதுங் குற்றமுடைத்தாம்.
அங்ஙனமாயின், கதிரவன் எழும் முன்னும் மறைந்த பின்னும் நீராடுதல் நன்றென்று சிலர் பலர் கூறுதல் என்னை யெனின்; அவர் உலக இயற்கையில் நிகழும் மாறுதல்களை அறியாமற் சொல்லுதலின் அஃது ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று. கதிரவன் விளங்கும் பகற்காலத்தே உயர்ந்த தேம்பொருள் உலகம் எங்கும் பரவி உயிர் வாழ்க்கைக்குப் பேருதவி செய்து வருதலின், அக்காலத்தே நீராடுதல்தான் உடம்பிற்கு நன்மையைத் தரும். வெயில் மறைந்தபின் ஞாயிற்றினின்று